சென்னை

தேமுதிக மற்றும் பாஜக இடையே கூட்டணிப் பேச்சு இல்லை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் இதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. அனைத்துக் கட்சிகளும் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.

கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. மேலும் தேர்தல் கூட்டணி, தேர்தல் பரப்புரை, தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகளைக் கட்சிகள் துரிதப்படுத்தியுள்ளன.

அ.தி.மு.க. – தே.மு.தி.க. கட்சிகளுக்கு இடையிலான 2-ம் கட்ட கூட்டணிப் பேச்சுவார்த்தை சமீபத்தில் நடந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி உறுதி என்ற நிலையை எட்டியுள்ளதாக தே.மு.தி.க. கட்சியின் அவைத்தலைவர் இளங்கோவன் தெரிவித்திருந்தார்.

அதே வேளையில்  பா.ஜ.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியானது. தே.மு.திக. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு நாங்கள் நேரம் தரவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.