டில்லி:

சி.பி.எஸ்.இ. கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தில், சிபிஎஸ்இ எதிர்த்து  தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும், மறுதேர்வு தொடர்பாக சி.பி.எஸ்.இ. எடுக்கும் முடிவுகளில் நீதிமன்றம் தலையிடாது எனவும், சிபிஎஸ்இ கல்வி வாரியமே முடிவு எடுக்கலாம் என்றும் நீதிபதிகள்  தெரிவித்தனர்.

மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இ நடத்திய பிளஸ்2 மற்றம் 10வது வகுப்பு தேர்வு வினாத்தாள் வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, பிளஸ்2 பொருளியல் மற்றும் 10வது கணிதத்திற்கு மறு தேர்வு தேதியை சிபிஎஸ்இ அறிவித்தது.

ஆனால், அதற்கு எதிராக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தில் குதித்தனர். மேலும் இது தொடர்பாக பல வழக்குகளும் உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்டது.

இதற்கிடையில், பிளஸ்2க்கு மட்டும் மறு தேர்வு அறிவித்துள்ளது. 10வது வகுப்புக்கு மறு தேர்வு கிடையாது என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கேள்வித்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக  சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் அனைத்து இன்று விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது,   ஒரே விவகாரம் தொடர்பாக நிறைய வழக்குகள் தொடரப்பட்டுள்ளதால், வழக்குகளை தள்ளுபடி செய்வதாகவும், இந்த விவகாரத்தில் சிபிஎஸ்இ கல்வி வாரியமே முடிவு எடுக்க வேண்டும் என்றும் கூறி தள்ளுபடி செய்தது.