டில்லி

டில்லி வந்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேசி உள்ளார்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சி அமைச்சரவையில் இருந்து விலகியது தெரிந்ததே.   தற்போது தெலுங்கு தேச கட்சி தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு டில்லிக்கு வந்துள்ளார்.   அவரது தெலுங்கு தேசம் கட்சி அளித்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவு திரட்ட பல எதிர்கட்சி தலைவர்களை அவர் சந்தித்து வருகிறார்.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “சரத் பவார், வீரப்ப மொய்லி, உள்ளிட்ட பல தலைவர்களை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசி உள்ளார்.  மேலும், சிரோமணி அகாலி தளம், திருணாமுல் காங்கிரஸ்,  இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அதிமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட பல கட்சிகளின் முக்கிய பிரமுகர்களிடம் அவர் சந்திப்பு நிகழ்த்தி உள்ளார்.   மேலும் அவர் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலையும் சந்தித்துள்ளார். “ என கூறப்பட்டுள்ளது.

சந்திரபாபு நாயுடு, “எதிர்கட்சிகளுக்கு மத்திய அர்சு அநீதி இழைத்து வருகிறது.   மாசில நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதை பாஜக அரசு தவிர்த்து வருகிறது.   இது குறித்து நான் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சி தலைவர்களுடனும் பேசி உள்ளேன்    ஆந்திர மாநிலத்துக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து தெரிவித்துள்ளேன்”  எனக் கூறி உள்ளார்.

அவருக்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல எதிர்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.   மேலும் தெலுங்கு தேச கட்சியின் முத்த தலைவர் ஒருவர் தற்போது பாஜவுக்கு எதிரான மூன்றாம் அணியில் சந்திரபாபு நாயுடு இணைய மாட்டார் எனவும்,  2019 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்வுக்குப் பின் அவர் இது குறித்து தனது முடிவை அறிவிப்பார் எனவும் கூறி உள்ளார்.