சென்னை: அமைச்சர்  உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளை உச்சநீதிமன்றம்  தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தற்போது உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்று சட்டமன்ற தேர்தலில், திமுக சார்பில், அப்போது இளைஞரணி தலைவராக இருந்த உதயநிதி ஸ்டாலின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். சென்னை  சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார்.   அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் கசாலியை விட 69 ஆயிரத்து 355 வாக்குகள் அதிகமாக வாங்கி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் வெற்றியையடுத்து தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான எம்எல் ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார்.  அவரது மனுவில், உதயநிதி தன் மீதான குற்ற வழக்கு விவரங்களை முழுமையாக தெரிவிக்கவில்லை என்றும் அந்த வேட்பு மனுவை ஏற்றது தவறு என்றும் எம்எல் ரவி என குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் வழக்கை வாபஸ் பெறுவதாக தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான எம்எல் ரவி கூறி வாபஸ் பெற்றார். அதுபோல மற்றொரு வழக்கும் விசாரணையைத் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து வழக்கு தள்ளுபடி செய்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  அமைச்சர்   உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளை தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர். ஏற்கனவே இந்த  வழக்குகளை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட வேண்டிய முகாந்திரம் இல்லை என்று   தெரிவித்துள்ளனர்.