டெல்லி: நீட் தேர்வு விலக்கு கோரி திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்திற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. இளைஞர் அணி, மருத்துவர் அணி, மாணவர் அணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதை, திமுக இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்களை பெறும் வகையில் இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை ஷெனாய் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி நடத்திய நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிரான இயக்கத்தில் தனது கையெழுத்தை பதிவு செய்தார். இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தினர், அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களிடையே கையெழுத்து பெற்றது சர்ச்சையானது.
இதைத்தொடர்ந்து இந்த கையெழுத்து இயக்கத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவரது மனுவில், நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசு இயற்றிய சட்டத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஆனால் அதற்கு எதிராக மாநில அமைச்சர் போராட்டம் அறிவிக்க முடியாது. க நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் பள்ளிகளில் நடத்தப்படுகிறது. இதனால் மாணவர்கள் நிர்பந்தம் செய்யப்படுகிறார்கள். இதனால் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டாம் என்ற எண்ணம் மாணவர்கள் மனதில் ஏற்படும். படிப்பில் இருந்து மாணவர்களின் கவனம் திசை திரும்பும். அதனால் பள்ளிகளில் கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதிக்க கூடாது அதற்கு தடை விதிக்க வேண்டும்.மேலும் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு சரியான வழிகாட்டு நெறிமுறைகளைவகுக்க வேண்டும்” என தெரிவித்தனர்.
இந்த வழக்கின் விசாரணையின்போது, “கையெழுத்து இயக்கத்தை மக்கள் ஏற்கிறார்கள் என்றால் அதனை எப்படி தடுக்க முடியும்? என்றதுடன், இந்த விஷயத்தில் நாம் எதனையும் குறிப்பிட்டு தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை” என்றும், இதில் உச்சநீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என தெரிவித்த, நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.