சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
நீட் தேர்வு காரணமாக, தமிழக அரசு பாடத்திட்டத்தில் படிக்கும் மாணாக்கர்கள், மருத்துவம் படிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வகையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டு அமல்படுத்தப்பட்டது. இதன்மூலம் கடந்த ஆண்டு, 325 அரசு பள்ளி மாணாக்கர்கள் மருத்துவம் படிப்பில் இணைந்தனர்.
இதற்கிடையில், அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப்படிப்பில் பயன்பெறும் வகையில் தமிழகஅரசு கொண்டு வந்த 7.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு எதிர்த்து பலர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்குள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடியானது. இந்த நிவைலயில், தமிழகஅரசின் சட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி திருச்சியை சேர்ந்த மாணவர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதிகள், இது தொடர்பாக மனுதாரர் தேவைப்பட்டால் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.