டெல்லி: மாநிலங்களவையில் சபையில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதால் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள ஆம்ஆத்மி எம்.பி. ராகவ் சதா, ராஜ்யசபா தலைவரிடம் மன்னிப்பு கேட்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
ஆம் ஆத்மி எம்பி ராகவ் சதாவை ராஜ்யசபா தலைவர் ஜகதீப் தங்கரை சந்தித்து, மக்களவையில் நடந்த குற்றச்சாட்டில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
ஆம் ஆத்மியை சேர்ந்தவர் ராகவ் சத்தா, இவர் ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார். நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்ற கூட்டத் தொடரின்போது, டில்லி நிர்வாக திருத்த மசோதா குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது, ராகவ் சத்தா, இதுகுறித்து ஆராய, தேர்வுக் குழுவை அமைக்கும்படி முன்மொழிந்தார். அதில் தங்கள் ஒப்புதல் இல்லாமலே பெயர்கள் சேர்க்கப்பட்டதாகக் கூறி, அ.தி.மு.க., – எம்.பி., தம்பிதுரை உட்பட நான்கு எம்.பி.,க்கள் சபை தலைவரிடம் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக பாராளுமன்ற உரிமைக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக அவையில் பேசிய ராகவ் சத்தா, ஒழுங்கீனமாக நடந்துகொண்டார். இதையடுத்து, அவரை ராஜ்யசபா தலைவர் இடைநீக்கம் செய்தார். சபையில், அப்பட்டமான விதிமீறல், தவறான நடத்தை, அவமதிப்பு நடத்தை ஆகிய காரணங்களை குறிப்பிட்டு, ராகவ் சத்தாவை ராஜ்யசபா தலைவர் கடந்த ஆகஸ்டு 11ந்தி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இந்த இடை நீக்கத்தை எதிர்த்து ராகவ் சதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது, அப்போது, ராகவ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சதன பராசத் தன் வாதத்தில், ”ராஜ்யசபா உறுப்பினர்களிலேயே மிகவும் இளையவர் ராகவ் சத்தா. இந்த விவகாரத்தில் ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கரை சந்தித்து மன்னிப்பு கேட்க தயாராக உள்ளார்,” என தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், இந்த விவகாரத்தில் ராஜ்ய சபை தலைவரை சந்தித்து மன்னிப்பு கேட்க ராகவ் சதா தயாராக இருக்கும் பட்சத்தில், தாராளமாக அவர் அதை செய்யலாம். ராகவ் இளைய உறுப்பினர் என்றும், சபையின் கண்ணியத்தை பாதிக்கும் எண்ணம் அவருக்கு இல்லை என்றும், அவரது வழக்கறிஞர் கூறுகிறார். அதை மனதில் வைத்து ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கரை சந்தித்து நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கலாம் என உத்தரவிட்டனர்.