டில்லி

காராஷ்டிராவில் மருத்துவ பட்டமேற்படிப்புக்கு 10% பொருளாதார நலிவுற்றோர் இட ஒதுக்கீட்டில் இருந்து உச்சநீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.

 

மத்திய அரசு அனைத்து சாதியிலும் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்காக 10% இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என சட்டம் இயற்றியது. அந்த சட்டத்தில் அனைத்து சாதியிலும் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல இடங்களில் 10% இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என உள்ளது.

இந்த சட்டத்தை மகாராஷ்டிர அரசு சென்ற மார்ச் மாதத்தில் இருந்து அமுல் படுத்தியது. இதை ஒட்டி மகாராஷ்டிர மாநிலத்தில் 2019-20 ஆம் வருட  மருத்துவ பட்டமேற்படிப்பு சேர்க்கைக்கு இந்த இட ஒதுக்கீட்டின்படி இடம் அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி அனிருத்தா போஸ் அமர்வு விசாரித்தது.

இன்று இந்த அமர்வு, “இந்த சட்டம் சென்ற மார்ச் மாதம் முதல் அமுலுக்கு வந்துள்ளது. ஆனால் இந்த மருத்துவ பட்டமேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கை அதற்கு முன்பிருந்தே தொடங்கி விட்டது. விளையாட்டு ஆரம்பிக்கப்பட்ட பிறகு விதிமுறைகளை மாற்ற முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

அதனால் இந்த வருடம் அதாவது 2019-20 க்கான மகாராஷ்டிர மாநில மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு 10% இட ஒதுக்கீடு அளிக்க முடியாது. அத்துடன் தற்போதுள்ள நிலையில் மற்ற மாணவர்களுக்கான பொது ஒதுக்கீட்டில் இருந்து இட ஒதுக்கீடு அளிக்க வேண்டிய நிலை உள்ளது. அதனால் மருத்துவ கவுன்சில் இடங்களை அதிகமாக்கும் வரை 10% இட ஒதுக்கீடுஅளிக்க முடியாது” என தெரிவித்துள்ளது.