திரைப்பட இசையமைப்பாளர் தேவா பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் தேவா THE தேவா என்ற பெயரில் இசைநிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நடிகைகள் மீனா, மாளவிகா, நடிகர் ஜெய், இயக்குனர் விக்ரமன், இசையமைப்பாளர்கள் ஸ்ரீகாந்த் தேவா, அனிருத் உள்ளிட்ட திரைப்பட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் இசையமைப்பாளர் தேவா தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

அப்போது பேசிய ரஜினிகாந்த், சிங்கப்பூர் அதிபராக இருந்த எஸ்.ஆர். நாதன் அவர்கள் தனது மறைவுக்குப் பிறகு நடைபெறும் அஞ்சலி நிகழ்ச்சியில் தேவா இசையமைத்து பொற்காலம் படத்தில் இடம்பெற்ற “தஞ்சாவூரு மண்ணு எடுத்து” என்ற பாடல் ஒலிபரப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதேபோல் 2016 ம் ஆண்டு அவர் மறைந்த போது அவரது இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் அந்த பாடல் ஒலிபரப்பப்பட்டு அதில் கலந்து கொண்ட பிறநாட்டு தலைவர்கள் எல்லாம் அந்தப் பாடலை தங்கள் தாய்மொழியில் மொழிபெயர்ப்பு செய்தனர்.

அப்படிப்பட்ட பெருமைக்குச் சொந்தக்காரரான தேவா குறித்து தமிழக ஊடகங்கள் எந்த ஒரு செய்தியும் வெளியிடவில்லை என்று வருத்தத்துடன் கூறினார்.

தமிழகத்தை பூர்விகமாக கொண்ட எஸ். ராமநாதன் என்கிற எஸ்.ஆர். நாதன் பிரிட்டிஷ் மலேயா-வில் பிறந்து பின்பு படிப்படியாக உயர்ந்து சிங்கப்பூரின் நீண்டநாள் ஆட்சியில் இருந்த அதிபர் (1999-2011) என்ற பெருமையைப் பெற்றார்.

ஒரு தமிழராக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைக் குறிக்கும் இந்த பாடலை மிகவும் விரும்பிய அவர் இதனை தனது மறைவுக்குப் பிறகு ஒலிபரப்பவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு நாடுகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த பாடல் குறித்து தேவா பிறந்தநாள் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் குறிப்பிட்டது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

ரஜினிகாந்த் திரைப்படங்களில் ரஜினி டைட்டில் இசைக்கு சொந்தக்காரர் இசையமைப்பாளர் தேவா என்பது கூடுதல் தகவல்.