கடந்த வருடம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதனால் கொரோனா ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டது.

நிலைமை சரியாகிவிட்டது என நினைக்கும் தருவாயில் கொரோனாவின் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் மீண்டும் தொடங்கி விட்டது. போன முறையை விட இந்த முறை அதி வேகமாக பரவி வருகிறது கொரோனா.

பலரும் கொரோனாவின் 2-வது அலையில் சிக்கித் தவிக்கும் நிலையில் திரைத்துறை நட்சத்திரங்களும் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் தனக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்து நடிகை சுனைனா பதிவிட்டுள்ளார்.

“அனைவருக்கும் வணக்கம். அதிக ஜாக்கிரதையாக இருந்தும் எனக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது. வீட்டில் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். அத்தனை விதிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன்.

என் குடும்பத்தினர் தவிர யாருடனும் நான் தொடர்பில் இல்லை. அவர்கள் அனைவரும் தனிமையில் உள்ளனர். எனது சமூக வலைதளப் பக்கங்களை மொத்தமாக ஒதுக்கிவைத்துவிட்டு ஓய்வெடுக்க வேண்டும் என்கிற விருப்பம் இருந்தாலும், தேவை இருப்பவர்களுக்கு சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ உதவியாக இருக்கும் விஷயங்களைப் பகிரும் வாய்ப்பை நான் இழக்க விரும்பவில்லை.

தயவுசெய்து முகக் கவசம் அணியுங்கள், வீட்டிலேயே இருங்கள், உயிர்களைக் காப்பாற்றுங்கள். நான் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்” என்று சுனைனா இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.