இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மூசி ஆற்றில் இருந்து ஆளுயர புத்தர் சிலை முதல் விலைமதிப்பற்ற பல அரிய பொக்கிஷங்கள் மீட்கப்மட்டுள்ளன.

கர்ணபரம்பரைக் கதைகளில் மட்டுமே கேள்விப்பட்டு வந்த ‘தங்கத் தீவு’ இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இருப்பது உண்மை என்பது நீருக்குள் மூழ்கிய இந்த மணற்திட்டு கண்டுபிடிக்கப்பட்ட பின் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கி.பி. எட்டாம் நூற்றாண்டு முதல் 14 ம் நூற்றாண்டு வரை மூசி ஆற்றுப்படுகையில் இருந்த ஸ்ரீவிஜய சாம்ராஜ்ய பகுதி கால மாற்றத்தால் கடல் கொண்டது, அதன் பின் அந்த சாம்ராஜ்யமும் அது இருந்த இடமும் தடம் தெரியாமல் அழிந்து போனது வரலாறு.

படம் நன்றி : தி கார்டியன்

சீனாவுக்கும் மத்திய தரைக்கடல் பகுதிக்கும் இடையே கடல்மார்க்கமாக செயல்பட்டு வந்த பட்டு வழி தடத்தில் சுமத்ரா பகுதியில் இருந்த ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்திற்கு பெரும்பங்கு இருந்தது.

இங்கிருந்து கண்டெடுக்கப்பட்ட தங்கம் உள்ளிட்ட நவரத்தின கற்கள் இந்த பகுதியில் இருந்த ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் செல்வச்செழிப்பில் திளைத்திருந்ததற்கு சான்றாக அமைந்துள்ளது.

ராகுவின் தலை பொறிக்கப்பட்ட வளையம்

ஆளுயர புத்தர் சிலை மட்டுமன்றி, ராகுவின் தலை பொறிக்கப்பட்ட கதவைத் தட்டி ஒலியெழுப்பும் வளையம் உள்ளிட்ட வேத கால அரியவகை பொக்கிஷங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆய்வு நடத்திய பிரிட்டனைச் சேர்ந்த கடல்வழி தொல்லியல் ஆய்வாளர் டாக்டர் சீன் கிங்ஸ்லி, ‘ரெக்வாட்ச்’ என்ற இதழில் விரிவாக விவரித்துள்ளார்.

இந்த இடத்தை முதலில் கண்டுபிடித்தது சுமத்ரா பகுதியைச் சேர்ந்த ஆழ்கடல் மீனவர்கள் தான் என்றும் அவர்கள் இந்த இடம் மற்றும் பொக்கிஷங்களின் பெருமையை அப்போது அறிந்திருக்கவில்லை என்றும் குறிப்பிடுகிறார்.

கடந்த ஐந்தாண்டுகளாக நடைபெற்று வரும் ஆய்வில் சமயம், மதம், மற்றும் கலாச்சாரத்தை குறிக்கும் பல அரிய பொருட்கள் கிடைத்துள்ளதாகவும் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.