சுல்தான்- திரைப்பட விமர்சனம்

Must read

ஏப்ரல் 2 திரையரங்குகளில் வெளியாகியுள்ள சுல்தான் பற்றிய திரை விமர்சனம். நடிகர்கள் கார்த்தி, ரஷ்மிகா மந்தனா, நெப்போலியன், லால், யோகி பாபு, சதிஷ், எம் என் பாஸ்கர், பொன்வண்ணன், மயில்சாமி, கேஜிஎஃப் புகழ் ராமச்சந்திர ராஜு உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

இப்படத்தை இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பாடல்களுக்கு விவேக் மற்றும் மெர்வின் இசையமைத்துள்ளனர். பின்னணி இசையை யுவன் ஷங்கர் ராஜா அமைத்துள்ளார். எடிட்டிங் பணிகளை ரூபன், மற்றும் ஒளிப்பதிவை சத்ய சூரியன் செய்துள்ளனர். இந்தப் படம் தமிழிலும் தெலுங்கிலும் வெளியாகியுள்ளது.

கதைச் சுருக்கம்: ஒரு நேர்காணலில் பாக்யராஜ் கண்ணன் கூறியது போல மஹாபாரதத்தில் கிருஷ்ண பகவான் பாண்டவர் பக்கமில்லாமல் கௌரவர்கள் பக்கம் இருந்திருந்தால்….போரின்றி, உயிர்சேதமின்றி அமைதியாய் கதை நிகழ்ந்திருக்கும். அது போலவே கதாநாயகனும் தம் கூட்டத்தைக் காக்க என்னவெல்லாம் பாடுபடுகிறார் என்பதே கதை.

கார்த்தி பிறந்தபின் தாய் இறக்கிறாள்…தந்தை நெப்போலியன், மாமா லால் மற்றும் நூறு “பார்க்கவே பயமுறுத்தும்” அடியாட்கள்/அண்ணன்கள் அவரை வளர்க்கிறார்கள். மேற்படிப்பு முடிந்து மும்பையிலிருந்து கார்த்தி விடுமுறைக்கு தம் ஊருக்கு வருகிறார். நெப்போலியன் கார்த்தியிடம், முரடர்களாக இருக்கும் அந்த கூட்டத்தைப் பார்த்துக்கொள்ளும்படி வேண்டுகிறார். நெப்போலியனக்கு பிறகு அந்த மாபெரும் பொறுப்பு கார்த்தியின் மேல் விழுகிறது. தேவர்மகன் படம் நினைவிற்கு வந்தால் நான் பொறுப்பில்லை.

சென்னையிலேயே இருந்தால் தம்மை வளர்த்த அண்ணன்மார்கள் நாதியற்று போய்விடுவார்களென்று, கார்த்தி அந்தக் கூட்டத்தை கிராமப்புறத்திற்கு நகர்த்துகிறார். அங்கே கதாநாயகி ரஷ்மிகா மந்தனா அறிமுகம். கார்த்திக்கும் ரஷ்மிகாவிற்கும் இடையேயான காதல் கெமிஸ்ட்ரி அருமை. எங்கே சென்றால் தம் கூட்டத்தைக் காக்கமுடியும் என்று கார்த்தி எண்ணினாரோ, அதே இடத்தில பூகம்பமாய் விவசாயத்திற்கு எதிரியாய் ஒரு வில்லன் கூட்டம். தம்முடைய கூட்டத்தைக் காப்பாற்றினாரா, விவசாயத்தையும் காப்பாற்றினாரா என்பது மீதிக் கதை.

இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் மிக நேர்த்தியாக கதையை நகர்த்திக் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பின்னணி இசையை யுவன் ஷங்கர் ராஜா கலக்கலாகக் கையாண்டுள்ளார். சண்டைக் காட்சிகளில் தயாரிப்பின் பிரமாண்டம் தெளிவாகத் தெரியத்தான் செய்கிறது.

மொத்தத்தில் இந்த படம் திரைஅரங்கில் மாஸ்க் அணிந்து (கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு), பெரிய திரையில் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கவேண்டிய ஒரு படம்.

More articles

Latest article