ஆழ்துளை கிணற்றில் புதைக்கப்பட்ட, நிதானம்….

சிறப்புக்கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்

இதுவரை நடக்கவே நடக்காத புதுமாதிரியான சம்பவம் இல்லை. இதற்கு முன்பு உலகம் முழுக்க, இந்தியா விலும், ஏன் தமிழகத்திலும் கூட இதேபோல் நடந்துள்ளன

சமீபத்தில் இதுபோன்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து வெளிவந்த அறம் என்ற தமிழ் திரைப்படம் மாபெரும் வெற்றியே கண்டது. விறுவிறுப்பு மற்றும் இரக்க சிந்தனை அடிப்படையில் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது..

எதனால் பயங்கரங்கள் நேருகின்றன என்று தெள்ளத்தெளிவாக எல்லோருக்குமே தெரியும். ஆனாலும் சம்பந்தப்பட்ட யாருக்கும் விழிப்புணர்வு வரவில்லை.. விளைவு ? நடுக்காட்டு பட்டி என்ற கிராமத்தில் இரண்டு வயது குழந்தை மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்து விட்டது.

சம்பவத்தை கேள்விப்பட்ட எந்த மனித மனமும் கலங்காமல் இருக்கமுடியாது. குழந்தையை எப்படியாவது மீட்டாக வேண்டும் என்று அவரவர் மொழிகளில் தெரிந்த வழிகளில் கண்ணீர்மல்க வேண்டினார்கள்.

நான்கு நாட்கள் போராடியும் குழந்தை சுஜித் வில்சனை மீட்க முடியவில்லை. சடலமாகத்தான் மீட்க முடிந்தது என்று அறிவித்தது மீட்புபணியில் ஈடுபட்டிருந்த தமிழக அரசு.

ஆனால் சுஜித் விவகாரத்தில் கற்க வேண்டிய பாடத்தைவிட ஒவ்வொரு தரப்பும் கைவிட வேண்டிய பழக்கங்கள்தான் அதிகம்.

முதல் தரப்பு, மீடியாக்கள். செய்தியாக்குவதைவிட களத்தில் இடையூறாக இருக்கக்கூடாது என்பதை முதலில் அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்..

மும்பை தாஜ் ஓட்டலில் தீவிரவாதிகள் புகுந்து தாக்கியபோது, அவர்களுக்கு உள்ளே இருக்கும் விருந்தினர்கள் யார்யார் என்றே தெரியாது, ஆனால் ஓட்டலுக்கு வெளியே இருந்த 24 மணிநேர டிவி கோஷ்டிகள், உள்ளே சிக்கியிருப்பது இன்ன இன்ன விஜபிக்கள் என்று தீவிரவாதிகளுக்கு லைவ் ரிலே மூலம் பட்டியல் வாசித்துகொண்டிருந்தார்கள்.

இதன் அர்த்தம் என்ன? லட்டு மாதிரி ஆட்கள் சிக்கியுள்ளார்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்பதுதானே?

அதைவிடக்கொடுமை, சிறப்பு அதிரடிப்படையினர் எந்தெந்த ரூட்டில் உள்ளே புகுந்து எதிர் தாக்குதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் என்பதை அவ்வளவு தெளிவாக காட்டினார்கள். இதன் அர்த்தம் என்ன?

பாதாம்கீர் குடித்துக்கொண்டே எங்கள் டிவி லைவ்வை பார்த்து தெரிந்துகொண்டு உங்கள் வேலையை நீங்கள் தாராளமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்பதுதானே? லைவ் வாலாக்களின் ஒரே நோக்கம் பார்வையாளர்களை தங்கள் டீவியைவிட்டு போகவேவிடக்கூடாது என்பதுதான்.

சுஜித் சம்பவத்திலும் அதேதான். அநியாயத்துக்கு எந்நேரமும் நேரடி ஒளிபரப்பு என அக்கப்போர் செய்தார்கள். சுஜித் மீட்புபணியை டீவியில் பார்க்காவிட்டால் உனக்கு மனித நேயமே செத்துப்போய்விட்டது என்று மறை முகமாக நேயர்கள்மீது முத்திரையே குத்தினார்கள்.

எட்ட நின்று, மேற்கொண்டு ஏதாவது நடந்தால் நியூஸ் புல்லட்டின்களில் அப்டேட் செய்கிற தகவல்களை பிரேக்கிங்..பிரேக்கிங் என போட்டு மக்களின் நாடி நரம்பையெல்லாம் சூடேற்றியபடியே இருந்தார்கள்.

சென்னையில் இருந்து ஒரு நிபுணர் கிளம்பினார் என்றால், காருக்குள் ஏறினார், காரின் வேகம் நூறு கிலோமீட்டர் வேகத்தை தாண்டியது. விழுப்புரம் கடந்தார், பெரம்பலூரை தொடப்போகிறார் என அவரின் ஒவ்வொரு நிமிட செயல்பாடும் பிரேக்கிங்.பிரேக்கிங் என டிவிக்களில் அலறவிடப்பட்டன.

குழி தோண்ட ரிக் வாகனம் வருவது, பழுதாவது சரிசெய்யப்படுவது என எந்த ஒரு கட்டமும் பிரேக்கிங்கிற்கு தப்பமுடியவில்லை. யார் யாரிடமோ மைக்கை கொடுத்து கருத்து கேட்கிறார்கள்.

வழக்கம்போல நடிகர் ரஜினியையும் விடவில்லை. இம்முறை சற்று விசேஷமாக அவரையும் தாண்டி மனைவி லதாவிடம்கூட கேட்டுவிட்டார்கள். தேவையா இதெல்லாம் என்று கேட்டால், பிரபலங்கள் பேசினால் மக்கள் மனதில் விழிப்புணர்வு ஏற்படும் என்ற பதில்கூட ரெடியாக இருக்கும்

சுஜித் சம்பவத்தில் நடக்காமல் போனது இரண்டே விஷயங்கள்தான். ஒன்று, மீடியாக்கள் தனியாக ஒரு குழியைத் தோண்டிக்கொண்டுபோய் சுஜித்திடம் அவன் நிலைமை பற்றி அவனிடமே பேட்டி எடுக்காமல் விட்டது,

இன்னொன்று குற்றும் குலையுயிருமாய் குழந்தை மீட்கப்பட்டு, ஆம்புலன்சுக்கு கொண்டுபோகப் பட்டிருந்தால், வழியில்கூடவே ஓடி கேள்வி மேல் கேள்வி கேட்டு அங்கேயே சாகடிக்காதது..

மற்றபடி எவ்வளவு முடியுமோ அவ்வளவு அபத்தங்களையும் பெரும்பாலான மீடியாக்கள் திவ்யமாகவே செய்துமுடித்தன.

களத்தில் உள்ள செய்தியாளர்கள், அவர்களை வேலை வாங்கும் ஒருங்கிணைப்பாளர், செய்தி ஆசிரியர் குழு, செய்தி ஆசிரியர் என அனைத்து தரப்புமே மறந்த அற்புதமான விஷயம், எவையெல்லாம் தேவையில்லாத தகவல்கள் என முடிவு செய்து வடிகட்டி செய்திதருவது என்ற கலையைத்தான்.

அந்த சேனலில் போட்டுவிட்டானா, அப்ப நாமும் போட்டுவிடுவோம் எதற்கு வம்பு என, அனைத்து மீடியாக்களின் மனப்பான்மையும் ஒரே பொதுப்புத்தியில் போய்விட்டுள்ளன.

நம் சேனல், நம்முடைய நம்பிக்கையான செய்தியாளர், நம் தரம், நாம் கொடுப்பதுதான் ஆணிவேர் செய்தி என்ற சுயகட்டுப்பாடும், தனித்துவமும் இல்லாததே இதுபோன்ற அவலங்களுக்கு காரணம்.

லைவ் என்று ஒன்றுக்கு இருக்கும் மரியாதையை மீடியாக்கள் புரிந்துகொள்ளாதவரை, எவ்வளவு சொன்னாலும் பலனில்லை.

அடுத்து அரசு தரப்பு. ஒரு விபரீத சம்பவம் நடந்தால், ஆளும் வர்க்கமும் அதிகார வர்க்கமும் அங்கே தீர்வைத் தேடித்தர விரையலாம். ஆனால் அங்கேயே உட்கார்ந்து கொண்டு.இருப்பது தேவையா என்ற கேள்வி எழாமல் இல்லை.

எந்த அமைச்சர் வேண்டுமானாலும் ஆழ்துளை கிணறு ஏரியாவில் நிரந்தர முகாமிடட்டும். ஆனால் சுகாதாரத் துறை அமைச்சர் ஏன் நான்கு நாட்களாக ஒரே பிரச்சினையை கட்டிக்கொண்டு அழுதார் என்பது அவருக்கே வெளிச்சம்?

ஆழ்துளை கிணறு விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரால் மட்டுமே தொழில்நுட்பங்களை அறிந்தும் விவேகத்துடனும் செயல்பட்டு மீட்பு குழுவினரை வேலைவாங்கமுடியும் என்ற நிலை இருந்தால் அதனை ஏற்றுக்கொள்ளலாம்.

அமைச்சர் விஜயபாஸ்கரின் இரக்க சுபாவத்தை நாம் எள்ளளவும் குறைசொல்லவில்லை. மற்ற நேரமாக இருந்தால் பரவாயில்லை. ஆனால், அரசு டாக்டர்களின் வேலைநிறுத்தம் ஒரு பக்கம் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும்போது தீர்வுகாண அங்கே ஏன் போகவில்லை என்பதுதான் கேள்வியே?

சுஜித் விவகாரத்தில் போலீஸ், பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு துறை, மின்சார வாரியம், வருவாய் என அரசின் பல துறையினர் 24 மணிநேரமும் அவர்கள் செய்தே ஆகவேண்டிய பணியை இரவு பகல் பாராமல் தொடர்ச்சியாய் செய்தார்கள்.

தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களையும் குடும்பத்தையும் மறந்து விட்டு போராடிய அவர்கள் மேல் எவ்வளவு தூரம் மீடியாக்களின் இரக்க வெளிச்சம் பட்டது?

அடுத்த தேற்றுதல் படலம். எத்தனை கோடிகளை கொட்டிக் கொடுத்தாலும் ஒரு தாய்க்கு அவளின் குழந்தைக்கு ஈடாகாது. அதுவும் கண்ணெதிரே குழிக்குள் விழுந்து அப்படியும் இப்படியும் அசைய முடியாமல் நாட்கணக்கில் தன் குழந்தை அணுஅணுவாய் மரணத்தோடு போராடுவதை காணவேண்டிய கொடுமை ஒரு தாய்க்கு நேருவது.. அதையெல்லாம் விவரிக்கவேமுடியாது.

அந்த பெண்ணுக்கு தேவை ஆறுதல். வெளிப்படையாக சொன்னால் வெற்று வார்த்தைகளால் யாரும் இந்த நிலையில் அவரை தேற்றிவிடமுடியாது. எவ்வளவு அழமுடியுமோ அவ்வளவு அழுது தீர்த்தால் மட்டுமே ஒரு தாய் துயரத்திலிருந்து மெல்ல வெளியேற முடியும். பிள்ளையை இழந்த பெற்றோரின் மனநிலை சகஜமாக திரும்புவதற்கு கவுன்சிலிங் கொடுக்கலாம். அவர்களின் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தால் சிகிச்சைக்கு உதவலாம்.

ஆனால் துக்கம் என்றாலே அள்ளி அள்ளி நிவாரணம் கொடுத்தால் எல்லாம் சரியாகிப்போய்விடும் என்று நம்மூர் அரசியல்வாதிகள் என்றைக்கோ அறிவாளித்தனமாக முடிவு செய்துவிட்டார்கள். இப்போதெல்லாம் மற்ற கட்சிகளை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி அவர்களின் யோக்கியதையை பாருங்கள் என்று சொல்வதற்காகவே, சாதனை படைத்தவர்களையும் சரி, சோதனையில் சிக்கியவர்களையும் சரி, உடனே தேடிப்போய் நிதியுதவி அளித்துவிடுகிறார்கள்.

சுஜித்தின் குடும்பத்திற்கு பத்து லட்ச ரூபாயை நிவாரணமாக கொடுக்கிறார் எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின்,  அதுவும் எப்படி மொத்த தொகையையும் ரொக்கமாக. முற்றிலும் ஆச்சர்யமான விஷயம். ஓரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் ரொக்கமாக கொடுக்கக்கூடாது என்ற விதியைக்கூட அவரிடம் யாரும் சொல்லவில்லையா?

அதிமுகவும் பத்து லட்சம் நிவாரணம். அரசு தரப்பில் பத்து லட்சம்.. இதுபோதாது கோடி ரூபாய் தரவேண்டும், அத்துடன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையையும் தரவேண்டும் என்ற கோஷம் வேறு முளைத்து, என்னடா நடக்குது தமிழ்நாட்ல என்று கேட்கவைத்து விட்டது.

இயற்கை சீற்றங்களில், விபத்துக்களில் இறந்தால் சம்மந்தப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் கொடுக்கலாம். அந்த வரிசையில் அதற்கேற்ப சுஜித்துக்கு கொடுக்கலாம். அதை யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை.

படித்து முடித்து நன்றாக சம்பாதிக்க ஆரம்பித்து குடும்பத்தையே காப்பாற்றவேண்டிய சூழலில் ஒரு இளைஞன் தீவிரவாத தாக்குதலுக்கு ஆளாகி கொல்லப்பட்டான் என்றால், அங்கே அவனின் எதிர்கால சம்பாதியத்தையும் குடும்ப சூழ்நிலையையும் கருத்தில்கொண்டு நிவாரணத்தை கணிசமாக வழங்கலாம், அதுபோன்ற விதிவிலக்கான சம்பவமா சுஜித் விவகாரம்.?

சுஜித் குடும்பத்துக்கு சொந்தமான நிலத்தில் இருந்த அதே மூடப்படாத ஆழ்துளை கிணறு, ஆனால் அதற்குள் விழுந்தது வேறு ஒருவரின் குழந்தையாக இருந்திருந்தால்? என்னென்ன நடந்திருக்கும்? யோசித்துபாருங்கள்.

சுஜித் தந்தையை போலீஸ் தேடியிருக்கும் அவர் தலைமறைவாகியிருப்பார். இல்லைன்றால் கைது செய்யப்பட்டு உள்ளே போயிருப்பார். அவர் மனைவியை பார்த்து, குழந்தை குழிக்குள் விழ காரணமாக இருந்தவள் இவள்தான் என்று படத்தை போட்டு கழுவி கழுவி ஊற்றியிருப்பார்கள். இன்னும் பலப்பல.. அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஒரே வரியில் சொன்னால், அந்த குடும்பத்தை காப்பாற்றியதோடு, செல்வத்தையும் வரவழைத்து கொடுத்துவிட்டு போயிருக்கிறான் குழந்தை சுஜித்.

ஆனால் பல தரப்பினரோ,ஆழ்துளை கிணற்றில் நிதானத்தை புதைத்துவிட்டு, உணர்ச்சிப்பொங்கல் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் உணர்ச்சி வசப்படலாம். ஆனால் அவர்களுக்கு நிதர்சனத்தை காட்டவேண்டிய, சொல்லவேண்டிய இடத்தில் உள்ள மீடியாக்களும் அரசாங்கமும் உணர்ச்சிவசப்படவேகூடாது.