சிரியா,

சிரியாவில் தற்கொலை படையை சேர்ந்த பயங்கரவாதிகள்  பாதுகாப்பு மற்றும் ராணுவ உளவுப்பிரிவு தலைமை அலுவலகங்கள் அருகே நடத்திய தாக்குதலில் 42 பேர் உயிரிழந்தனர்.

சிரியாவில் 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா.சபை தீவிர முயற்சி மேற்கொண்டது. அதையடுத்து ஏற்பட்ட உடன்படிக்கைபடி ஒப்பந்தத்தில் அமெரிக்காவும், ரஷியாவும் கையெழுத்திட்டன.

ஆனால், சில நாட்கள் மட்டுமே நடைமுறையில் இருந்த இந்த ஒப்பந்தந்ததை இரு நாடுகளும் மீறி மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டன.

இந்த உள்நாட்டு போரில் ஏராளமான பொதுமக்கள் பலியாவதால் மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துவருகின்றன.

இந்நிலையில், சிரியாவின் ஹோம்ஸ் நகரில் உள்ள அலுவலகங்கள் அருகே வந்த சில பயங்கரவாதிகள் தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர்.

இந்த பயங்கர தாக்குதலில்பொதுமக்கள் உள்பட 42 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.6 பயங்கரவாதிகள்  இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்காத நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இதில் ஈடுபட்டி ுக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜெனிவா அமைதிப் பேச்சுவார்த்தையை மழுங்கடிக்கச் செய்யும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் அமெரிக்க புதிய அதிபர் டொனால்டு டிரம்ப்  சிரியாவுக்கு தரைப்படையை அனுப்பி ஒரு மாதத்திற்குள் ஐஎஸ் பயங்கரவாதிகளை அழித்துவிடுவதாக கடந்த வாரம் கூறியிருந்த நிலையில் இந்த பயங்கர தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.