சென்னை: சென்னை சென்ட்ரல் அருகே உள்ள  ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்தனர்.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் இரண்டாவது டவரின் பின்புறமுள்ள கல்லீரல் பிரிவில் மருத்துவ உபகரணங்கள் வைக்கும் அறையில் இன்று முற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அந்த அறையில் இருந்து புகை மளமளவென  வெளியேறியது. இதனால், மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள் என அனைவரும்,   கல்லீரல் சிகிச்சைப் பிரிவில் சிக்கியுள்ள நோயாளிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த  தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியிலும், அருகாமை கட்டடங்களுக்கு தீ பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்து வருகின்றனர்.

தீ புகையால் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், தீ விபத்து ஏற்பட்ட கட்டங்களுக்கு அருகில் இருக்கும் நோயாளிகளையும் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் உடனே விரைந்து வந்து  மீட்புப் பணிகளை மேற்பார்வை செய்து வருகின்றனர்.

காவல்துறை விசாரணையில், ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாகவும், இந்த விபத்தில் ஒருவரும் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.