நாகர்கோவில்: குமரி மாவட்டத்தின் பிரதிசித்தி பெற்றதும், மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக போற்றப்பட்டு வரும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெண்களின் சபரிமலை என அழைக்கப்படுவது மண்டடைக்காடு பகவதி அம்மன் ஆலயம். கன்னி்யாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ளது. இந்த கோவிலில் உருவாகி உள்ள புற்றுதான் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

15 அடிக்கு உயர்ந்து நிற்கும் புற்றின் மேல் பகவதி அம்மனின் முகம் சந்தனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.  அதற்கு முன்பாக வெள்ளியில் பகவதி அம்மன் சிலையும், அதற்கும் முன்பாக வெண்கலத்தில் நின்ற நிலையிலும் பகவதி அம்மன் அருள் மழை பொழிகிறாள்.
சபரிமலைக்கு ஆண்கள் 41 நாள்கள் விரதம் இருந்து,பயபக்தியுடன் சென்று வழிபட்டு வருவதைப் போல, ஒவ்வொரு ஆண்டும் மாசி கொடை விழாவை ஒட்டி கேரளத்து பெண்கள் 41 நாள்கள் பயபக்தியுடன் விரதம் இருந்து, இருமுடி கட்டி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்கிறார்கள்.  இங்கு வந்து வழிபட்டால் வேண்டியது நடக்கும் என்பது ஜதீகம்.
இந்த கோவில் கருவறையில் இன்று காலை 6.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விளக்கில் இருந்து தீ பரவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறத.
தகவல் அறிந்த தீயணைப்புத் துறை வீரர்கள், பொதுமக்கள் இணைந்து தீ பரவாமல் அணைத்தனர். நிலைமை இப்போது கட்டுக்குள் வந்துள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்மன் கருவறையில் தீ பிடித்தது அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏதாவது அசம்பாவிதத்துக்கு அறிகுறியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.