சிவன், திருமால், பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே தலத்தில் எழுந்தருளியிருக்கும் தலம் குமரி மாவட்டம் சுசீந்திரம் “தாணுமாலயசுவாமி ஆலயம்” தான்.

தலபுராணத்தில் கூறியபடி: “அத்திரி முனிவரும் அவர்தம் மனைவி அனுசூயாவும், இங்குள்ள தலவிருட்சம் கொன்றை மரத்தினடியில் நின்று வேண்ட மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்தனர்.”

அதைக்குறிக்கும் முகத்தான் மும்மூர்த்தியும் ஒருமூர்த்தியாய் “தாணுமாலயன்” என்னும் நாமம் தாங்கி எழுந்தருளியிருக்கிறார்.

பெண்ணாசையால் பல குற்றம் புரிந்த இந்திரன் கவுதம முனியின் சினத்துக்கும் சாபத்துக்கும் ஆளானான். அப்பாவத்தைக் களைய, இந்திரன் சுசீந்திரம் தாணுமாலயனை வேண்டித் தூய்மை பெற்றான்.

“சுசி” என்றால் தூய்மை அடைதல் என்று பொருள். இந்திரன் இங்கு தூய்மை பெற்றதால் இத்தலம் சுசீந்திரம் என்று விளங்கலாயிற்று. ஒவ்வொரு இரவிலும் இந்திரன் இங்கு வந்து பெருமானை வணங்கிச் செல்லுவதாகக் கதை.

கன்னியாகுமரி அம்மை தல புராணத்திற்கும் சுசீந்திரம் தலபுராணத்திற்கும் தொடர்பு உண்டு என்கின்றனர். பூவுலகம் நடுங்கும் வண்ணம் பாணாசுரன் பல வகையில் கொடுமைகள் செய்து வந்தான். உடனே நம் தேவர்களும், முனிவர்களும் வழக்கப்படி “எங்களைக் காத்து அருளும்” என சிவனிடம் வேண்டினர். முன்னமேயே, “பாணாசுரன் ஒரு கன்னியினால் அழிவான்” என பிரம்மன் சாபமிட்டிருந்தான். ஆகவே, சிவன், தன் சக்தியான பார்வதியைப் பூவுலகிற்கு அனுப்பி வைத்தார். அம்மையோ, தாணுமாலயப் பெருமானை மணக்க விரும்பியதால் ஒரு நன்னாளில் நள்ளிரவில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நன்னாளில் பெருமான் கன்னியாகுமரி கிளம்பினார். திருமணம் நடந்தால் அசுரவதம் நடக்காதே எனக்கவலையுற்ற நாரதர், ஒரு சேவலாக அங்கு வந்து கூவ, குறித்த நேரம் தவறிவிட்டது என தாணுமாலயன் சுசீந்திரம் திரும்பினார். திருமணம் தடைபட்டதால், கன்னியாகவே தவமிருந்து பாணாசுரனை அழித்து இன்னமும் கன்னித்தவத்தில் இருக்கிறாள் அம்மை.

சுசீந்திரத்தில் தாணுமாலயனுக்குத் திருமுழுக்காட்டு நடைபெற்றதும் அப்புனித நீர் நிலத்தடியே சென்று கன்னியாகுமரிக் கடலில் ஓர் இடத்தில் கலக்கிறது. அது “தாணுமாலயத் தீர்த்தம்” என அழைக்கப்படுகின்றது.