சென்னை

ங்கிகளில் ரூ. 700 கோடி மோசடி செய்ததாக சென்னை சுபிக்‌ஷா நிறுவன அதிபர் சுப்ரமணியன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 1970 ஆம் வருடம் முதல் தமிழகத்தின் சென்னை உட்பட பல நகரங்களிலும்,   மேலும் குஜராத்,   மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்னாடகா போன்ற மாநிலங்களிலும் சுபிக்‌ஷா சூப்பர் மார்கெட் நிறுவனம் பிரபலமாக நடந்து வந்தது.  இங்கு மளிகை பொருட்கள், பழங்கள்,  காய்கறிகள், மருந்துகள் உட்பட பல பொருட்கள் விற்கப்பட்டு வந்தது.   பிறகு இந்நிறுவனம்  செல்ஃபோன் விற்பனையிலும் இறங்கியது.

இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான சென்னை சேர்ந்த சுப்ரமணியனை சுபிக்‌ஷா சுப்ரமணியன் என அழைப்பது வழக்கம்.    இவர் சில நிதி நிறுவனங்களையும் நடத்தி வந்தார்.    இதன் மூலம் பொதுமக்களிடம் ரூ.150 கோடி நிதி முதலீடு பெற்று அதை மோசடி செய்ததாக குற்றம் பதியப்பட்டது.   இதையொட்டி 2015ஆம் ஆண்டு சுபிக்‌ஷா சுப்ரமணியன் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளி வந்தார்.

சுப்ரமணியன் வங்கிகளில் இருந்து சுபிக்‌ஷா சூப்பர் மார்கெட் நிறுவனத்துக்காக வாங்கிய ரூ. 700 கோடி கடனை திருப்பித் தராமல் மோசடி செய்ததாக மற்றொரு புகார் எழுந்தது.   இந்த புகாரின் விசாரணையில் இவர் கடன் வாங்கிய தொகையை சூப்பர் மார்கெட்டில் முதலீடு செய்யாமல் வேறு சொத்துக்கள் வாங்கி வங்கிகளில் மோசடி செய்தது தெரிய வந்தது.   அதையொட்டி நேற்று இவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய்யப்பட்டார்.

அவரை 7 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.   அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.    ஏற்கனவே இவருடைய நிதி நிறுவனங்களில் முதலீடு செய்தவர்கள் பெருமளவில் நேற்று நீதிமன்றத்தில் கூடி விட்டனர்.    சுப்ரமணியனை நோக்கி தாறுமாறாக கோஷமிட்டு அவரை தாக்க பாய்ந்த முதலீட்ட்டாளர்களை காவல்துறையினர் தடுத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.