சென்னை

சென்னை மின்சார ரயில்களில் வரும் 15 ஆம் தேதி முதல் அனைத்து நேரமும் மாணவர்கள் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாகச் சென்னை மற்றும் புறநகர்களில் ஓடும் மின்சார ரயில்கள் சென்ற வருடம் மார்ச் இறுதி முதல் நிறுத்தப்பட்டன.  அதன்பிறகு அரசு ஊழியர்கள் மட்டும் பயணம் செய்ய வசதியாக குறைந்த அளவில் ரயில்கள் இயக்கப்பட்டன.  மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அதன்பிறகு அடையாள அட்டை அல்லது அலுவலக அனுமதிக் கடிதத்துடன் தனியார் ஊழியர்கள் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.  மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது பெண்களுக்கு அனைத்து நேரமும் ஆண்களுக்குக் காலை 11 மணி முதல் மாலை 4 மணி மற்றும் மாலை 7 முதல் 10 மணி வரை பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது அனைத்துக் கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன.  மேலும்  9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புக்கள் தொடங்கப்பட்டுள்ளன.   கல்லூரிகளில் இரு வேளை வகுப்புக்கள் நடைபெற உள்ளன.  இதையொட்டி ரயில்வே நிர்வாகம் வரும் 15 ஆம் தேதி முதல் மின்சார ரயில்களில் அனைத்து நேரங்களிலும் மாணவர்கள் பயணிக்க அனுமதி அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.