சென்னை:

மாணவர்கள் அரசியலை பார்த்து ஒதுங்கக்கூடாது எனவும் கரை வேட்டி கட்டியவர்களால் அரசியலில் கறை படிந்துள்ளது எனவும்   லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் இளைஞர்கள் அதிக அளவில் சமூக வலை தளங்களை பயன்படுத்துவது குறித்த Media con ’19 என்ற தலைப்பில் கலந்துரையாடல்  நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட  கமல்ஹாசன்  மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது,  “சினிமாவில் டிஜிட்டல் மயம் வேண்டும் என்று 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்து கூவிக்கொண்டிருக் கிறோம். ஆனால், பலரின் சுய லாபத்துக்காக அது தாமதமாகி வந்தது. இப்படியே பல தொழில்நுட்பங்கள் தாமதமாகிக் கொண்டிருக்கின்றன. சமூக அக்கறை உள்ளவர்களாக மாணவர்களை மாற்றும் வல்லமை கொண்ட ஒன்றாக ஊடகம் மாறிவிட்டது. அந்தச் சாட்டையை மாணவர்கள் கையில் எடுத்துச் சுழற்ற வேண்டிய காலம் வந்து விட்டது. நான் பேசுவது அரசியல் என்று பலருக்கு சந்தேகம் வருகிறது. சந்தேகமே அல்ல அது அரசியல்தான்.

அரசியல் இல்லாமல் அரசு, கல்வி, விவசாயம் உள்ளிட்ட எந்த அடிப்படை பிரச்னைகளுக்கும் தீர்வு கிடையாது. எதிலும் ஒற்றை அறிவு, ஒற்றை முடிவு என்று இல்லாமல், பன்மைத்துவமாக இருக்க வேண்டும்.

‘மாணவர்கள் அரசியல் பேசுவதில் இருந்து ஒதுங்கி நிற்க கூடாது  கரைவேட்டி அசிங்கம் என்று மாணவர்கள் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதால்தான் இன்று அரசியலில் கறை படிந்திருக்கிறது” என்றார்.

தொடர்ந்து மாணவர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், “தமிழகத்தில் இளைஞர்களின் வேலை இழப்பை சரிசெய்ய வேண்டுமென்றால், கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும். மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ஆண்டுக்கு ஒரு புதிய திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

வாரிசு அரசியல் தொடர்பான கேள்விக்கு, வாரிசு அரசியல் என்பது சரியானது அல்ல.. வாரிசு அரசியல் சுதந்திரத்துக்கு முன்பு இருந்தாலும் பின்பு இருந்தாலும் அது தவறுதான். தமிழக அரசியலிலிருந்து குடும்பத்தைப் பிரிக்க முடியாது என்பது உண்மையாக இருந்தால், என்னுடைய குடும்பத்தை நான் பெரிதுபடுத்திக் கொள்கிறேன்.

இந்த இளைஞர்களே என்னுடைய குடும்பம். இளைஞர்களே நாளைய தலைவர்கள். எந்த மொழியையும் நான் எதிர்க்கவில்லை. மொழி என்பது குழந்தைகளின் டயபர் போன்றது. மொழி ஒரு தொடர்பியல் கருவிதான். எனவே அதை வைத்து அரசியல் செய்யக் கூடாது. அதனால் தான் உங்களையும் சேர்த்து என் குடும்பத்தை பெரிதாக்கினேன் என்று கூறினார்..

உணவகத்தில் நாம் என்ன உணவு உண்ண வேண்டும் என்பதை உணவகத்தினர் முடிவு செய்யக் கூடாது. சமூக வலைதளத்தில் நல்லது, கெட்டது எதுவாக இருந்தாலும் உயரத்தில் இருப்பவர்கள், பிரபலமாக இருப்பவர்கள் சொன்னால் அது அதிகம் நபரை சென்று சேரும். அந்த உயரத்தில் ஒரு சரியான ஆளைத்தான் நிறுத்தி வைக்க வேண்டும்.

தமிழகத்தில் அனைத்துத் திட்டங்களும் கமிஷன் சார்ந்து இயங்குகிறது. படித்த, அறிவுள்ள நபர்களைக் கைகுலுக்கி அழைத்து அருகில் வைத்து அவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு திட்டங்களை இயற்ற வேண்டும். ஆனால், இன்று யாரும் படித்தவர்களைக் கண்டுகொள்வது இல்லை.

தமிழைக் காப்பாற்ற வேண்டுமென்றால், தமிழ் நடக்கும் பாதையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தமிழில் பிறமொழிக் கலப்பில்லாமல் பயன்படுத்தப் பழக வேண்டும். காதலைக்கூட நாம் `ஐ லவ் யூ’ என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறோம். தமிழர்களுக்கு உணர்வு உள்ள வரை தமிழ் வாழும். அதை அசைக்க முடியாது. தமிழர்களின் கர்ஜனை உள்ளவரை தமிழ் எனும் காடு பெருகி வளர்ந்துகொண்டே இருக்கும்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.