திருச்சி:

பெரம்பலூர் அருகே திருமணம் நடக்க இருந்த 14வயது சிறுமி, திருமணத்தில் காப்பாற்றப்பட்ட நிலையில், அந்த சிறுமி சில இளைஞர்களால் வன்புணர்வு செய்யப்பட்டு சிதைக்கப்பட்ட சம்பவம் வெளியாகி உள்ளது. இது கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கடந்த மாதம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, திருமணம் நடக்க இருந்த 14வயது சிறுமி மீட்கப்பட்டு அரசு சேவை மையத்தில் தங்க வைத்தனர்.

இதையடுத்து அந்தச் சிறுமிக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அப்போது அவருடைய பிரச்சினைகள் குறித்து கேட்டறியப்பட்டது. அப்போது, அந்த சிறுமி சில இளைஞர்களால் வன்புணர்வு செய்யப்பட்ட பரிதாபம் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து காவல்துறையில் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து, சிறுமியை வன்புணர்வு செய்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கூறிய காவல்துறையினர், சிறுமியின் தந்தை இறந்த பிறகு, வாழ்வாதாரத்திற்காக  பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தாயுடன் வேலைக்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில் இரு இளைஞர்கள் அந்த சிறுமியை மிரட்டி பலமுறை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளதாகவும்,  சிறுமிக்கு, உரிய மருத்துவ பரிசோதனைகள் செய்யவும், மனநல ஆலோசனை வழங்கவும் திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.