சென்னை:
நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பயணம் செய்து ரெயில் பயணிகளை மிரட்டி ரகளையில் ஈடுபட்ட மாணவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சமீப காலமாக ரெயிலில் பயணம் செய்யும் மாணவர்களிடையேயும், பஸ்சில் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்களிடையேயும் ரூட் தல என்ற மாணவர்களின் தலைவர் பிரச்சினை காணமாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந்த மோதல் தற்போது ஒருவருக்கொருவர் வெட்டி கொலை செய்யும் அளவுக்கு உருவெடுத்து பயங்கரமாக மாறி உள்ளது.
நேற்று சென்னையை அடுத்த நெமிலிச்சேரி ரயில் நிலையத்துக்கு கைகளில் நீண்ட அரிவாள், கத்தி போன்றவற்றுடன் கூச்சலிட்டபடி இளைஞர்கள் வந்தனர். மாணவர்களின் கைகளில் நீளமான பட்டாக்கத்தியை பார்த்த பொதுமக்கள் அச்சத்துடன் விலகி சென்றனர்.
அப்போது வந்த ரெயிலில் ஏறிய அந்த கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கியபடி, வெளியே கத்தியை நீட்டிக்கொண்டும், ரெயில்வே பிளாட்பாரத்தில் கத்தியால் உரசிக்கொண்டும் பயணம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து ரெயில் நிலையத்தில் பட்டாசுகளை வெடித்தும், பாட்டுப்பாடியும் ரகளையில் ஈடுபட்டனர்.
மாணவர்களின் இந்த செயல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைத்தொடர்ந்து, மாணவர்களின் இந்த அடாவடி செயல் குறித்து ரெயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
விடியோவை மையமாக வைத்து ஆவடி, திருவான்மியூர், நெமிலிச்சேரி ரயில் நிலையங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதைத்கத்தியுடன் ரகளை செய்த 10 மாணவர்களை பிடித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறினர்.
மேலும் மாணவர்கள் கைது குறித்து அவர்களின் பெற்றோருக்கும், கல்லூரி நிர்வாகத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், மாணவர்களிடம் இருந்து நீளமான கத்திகள் கைப்பற்றப் பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த தண்டாயுதபாணி, பாலமுரளி கிருஷ்ணன், ஜகதீஸ்வரன் மற்றும் திருவள்ளூரை சேர்ந்த விக்னேஷ் ஆகிய நான்கு பேர் என்பது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட 4 மாணவர்கள் மீதும், ஆயுதங்கள் வைத்திருந்தது, பொது இடத்தில் பயங்கர ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.