மும்பை
கோவிஷீல்ட் டோஸ்களுக்கு இடையே கால இடைவெளி அதிகரித்ததால் அமெரிக்கா செல்லும் மாணவர்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் பரவலாகப் போடப்பட்டு வருகின்றன. சமீபத்தில் அனுமதி அளிக்கப்பட்ட ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஒரு சில இடங்களில் போடப்படுகின்றது. இவை அனைத்தும் இரு டோஸ்கள் போட வேண்டிய தடுப்பூசிகள் ஆகும்.
முதலில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரு மருந்துகளுமே 4 வார இடைவெளியில் போடப்பட்டு வந்தன. அதன் பிறகு கோவிஷீல்ட் மருந்துக்கு மட்டும் இடைவெளி அதிகரிக்கப்பட்டு 6 முதல் 8 வாரம் ஆக்கப்பட்டது. தற்போது அது மேலும் அதிகரிக்கப்பட்டு 12 வாரங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனால் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படிக்கச் செல்லும் இந்திய மாணவர்கள் நிலையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல நாடுகளில் இரண்டு டோஸ்கள் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். எனவே மாணவர்கள் இந்த கால இடைவெளியைக் குறைக்க மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது குறித்து சஞ்சய் என்னும் மாணவர். “இரண்டாம் டோஸ் தடுப்பூசிக்கான கால இடைவெளி குறைக்கப்படாவிட்டால் நான் எனது இரண்டாம் டோஸ் தடுப்பூசியை அமெரிக்கா சென்று போட்டுக் கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் அதற்கு அனுமதி இல்லை. எனவே நான் ஆகஸ்ட் வரை காத்திருந்து அதன் பிறகே பயணம் செய்ய முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.