சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கிய 11 மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த அதிமுக ஆட்சியின்போது, மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டின்கீழ் 24 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் மொத்தம் 3,350 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.
அதையடுத்து தமிழகஅரசின் வேண்டுகோளுக்கு இணங்க விருதுநகர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், நாகப்பட்டிணம், திருவள்ளூர், திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் புதிதாக 9 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், அரியலூா், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்குமாறு மாநில அரசு கோரிக்கை விடுத்தது. அதனைப் பரிசீலித்த மத்திய அரசு, அதற்கு அண்மையில் அனுமதி அளித்தது. இதனால் கடைசியாக அனுமதி வழங்கிய 11 மருத்துவக்கல்லுரிகளிலும் 1,408 தமிழக மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைக்கும் என அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபஸ்கர் கூறியிருந்தார்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்தில் புதிதாக தொடங்கிய மருத்துவ கல்லூரியில் மாணவர்களை சேர்க்க உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிதாக தொடங்கிய 11 மருத்துவ கல்லூரிகளில் தலா 150 மாணவர்களை சேர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. 11 மருத்துவ கல்லூரிகளிலும் ஆய்வகம் உள்ளிட்ட வசதிகளை விரைவாக செய்து முடிக்கவும் ஆணையிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே 3,350 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ள நிலையில், தற்போது கூடுதலாக 11 மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையுடன் மொத்தம் 4750க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.