விருதுநகர்: தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 72லட்சமாக அதிகரித்து உள்ளது என்றும், கடந்த இரு ஆண்டுகளில் 20லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளதாகவும், மாணவர்களை வெளிநாட்டுப் பயணம் அழைத்துச்செல்லும் திட்டம், மாணவர்கள் பரிசோதனை திட்டம் உள்பட பல திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்நத் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தக்குமார் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது, தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தல்படி, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகஇ அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு இந்த ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது என்று தெரிவித்தார்.
அரசு திட்டங்களான ‘இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், எண்ணும் எழுத்தும்’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முறையாக பள்ளிகளில் செயல்படுத்தபடுகிறதா? என்று ஆய்வு மேற்கொண்டு, கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
‘அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 70 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த இரு ஆண்டில் மட்டும் 20 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர். இதனை மேலும் அதிகப்படுத்த வேண்டும். 10 மற்றும் 12-ம் வகுப்புகளின் தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து, அவர்களை பள்ளிகளில் சேர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இடைநிற்றல் இல்லா மாநிலமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாணவர்களின் மனஅழுத்தத்தை போக்க, தன்னம்பிக்கையை வளர்ப்பதற்காக 800மருத்துவர்கள் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்டு உள்ளனர்.
பள்ளிகளில் தன்னம்பிக்கை வளர்க்கக்கூடிய உரைகளை சிறந்த பேச்சாளர்களை கொண்டு, மாணவர்களிடையே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
விலையில்லா மிதிவண்டிகளை உள்ளாட்சி பிரதிநிதிகளை வைத்து வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
2,500 பள்ளிகள் மரத்தடியில் செயல்படுகின்றன. அரசுப் பள்ளிகளில் இடிக்கப்பட்ட வகுப்பறைகளை புதிதாக கட்டுவதற்கு மொத்தம் 7,000 கோடி ரூபாயை 5 ஆண்டுகளுக்கு ஒதுக்கப்படவுள்ளது.
இந்த ஆண்டு மட்டும் 1,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 10,031 இடிக்கப்பட்ட வகுப்பறை கட்டடங்கள் புதுப்பிக்கப்படவுள்ளன.
பள்ளிக் கட்டிடங்கள் கட்டுவதற்கு அப்பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர்களின் நிதிகளை கொண்டு வகுப்பறை கட்டடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான கற்றல் இருக்க வேண்டும் என்பதற்காக நாட்டிலேயே முதன்முறையாக ரூ.9.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் 6,000-க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நமது கல்வித்துறையில் 413 ஒன்றியங்கள் உள்ளன. 800 மருத்துவர்கள் வருடத்திற்கு ஒருமுறை மாணவர்களை பரிசோதனை செய்ய செல்வதற்கு பதிலாக 3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்ய செல்ல வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் விதமாக, வாரம் ஒருமுறை நூலகத்திற்குச் சென்று அவர்கள் வாசிக்கும் புத்தகத்திலிருந்து வினாக்கள் கேட்கப்படும். அதில் வெற்றி பெறும் மாணவர்களில் மாநில அளவில் 250 பேர் தேர்வு செய்யப்பட்டு வெளிநாட்டுப் பயணம் அழைத்துச் செல்லும் திட்டமும் இருக்கிறது.
இவ்வாறு கூறினார்.
[youtube-feed feed=1]