தஞ்சாவூர்: தஞ்சை அருகே பள்ளி வளாகத்தில் மரம் முறிந்து விழுந்து மாணவி பலியான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு தமிழ்நாடு  முதலமைச்சர் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அடுத்த கண்டக்கரயம் மெயின் ரோட்டை சேர்ந்த விவசாயி செந்தில்குமார் பத்மா தமிபதியின் மூத்த மகள் சுஷ்மிதா (வயது 15) மற்றும், அருகே உள்ள  கணபதி கிராமம் தட்டாரத்தெருவை சேர்ந்தவர் கந்தன் மகள் ராஜேஸ்வரி (வயது 15) ஆகிய  இருவரும் அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவிலில் உள்ள அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர்.

நேற்று மாலை தஞ்சை உள்பட பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வந்த நிலையில்,  மாலை பள்ளி முடிந்து வெளியே வந்த சுஷ்மிதாவும், ராஜேஸ்வரி மீது,  பள்ளி வளாகத்தில் இருந்த ஒரு தூங்கு மூஞ்சி மரம் திடீரென வேரோடு சாய்ந்து விழுந்தது.  இதில், சுஷ்மிதா, ராஜேஸ்வரி  சிக்கிக்கொண்ட நிலையில்,  பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியைகள் 2 மாணவிகளையும் மீட்டு சிகிச்சைக்காக அய்யம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.  ஆனால் மரம் விழுந்து நசுக்கியதில், சுஷ்மிதா இறந்த விட்டதாக கூறிய மருத்துவர்கள், ராஜேஸ்வரிக்கு சிகிச்சை அளித்தனர். மேலும், அவர்  மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த பெற்றோர்கள், மற்றும்  உயிரிழந்த மாணவி குடும்பத்தில், சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், மாணவியின்  குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக்கோரினர்.

இதுகுறித்து தகவலறிந்த பாபநாசம் தாசில்தார் (பொறுப்பு) முருககுமார், வருவாய் ஆய்வாளர் ரெஜிலா, கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜ்குமார், முகமது முபாரக் அலி, அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மகாலெட்சுமி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துகிருஷ்ணன், வைரவன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.  இதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் மரம் விழுந்து உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம்  நிதியுதவி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில், தஞ்சை பசுபதிகோவில்-1 கிராமத்தில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் மாணவிகள் பாபநாசம் வட்டம். உள்ளிக்கடை, கண்டகரையத்தைச் சார்ந்த சுஷ்மிதாசென் (வயது-15) மற்றும் பாபநாசத்தைச் சேர்ந்த இராஜேஸ்வரி (வயது-15) ஆகிய இருவர் மீதும் நேற்று மாலை பெய்த மழை மற்றும் காற்றின் காரணமாக பள்ளியின் அருகிலுள்ள மரம் வேறோடு சாய்து விழுந்ததில் சுஷ்மிதாசென் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள இராஜேஸ்வரிக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன். மாணவி செல்வி.சுஷ்மிதாஷென்னை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு ஐந்து இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இராஜேஸ்வரிக்கு ஒரு இலட்சம் ரூபாயும் நிதியதவி வழங்கவும் உத்திரவிட்டுள்ளேன் என கூறப்பட்டுள்ளது.

பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து மாணவி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.