நீலகிரி

நீலகிரி மாவட்ட மாணவர் கேத்தன் என்பவர் தமிழக அமைச்சர்  சீனிவாசன் தம்மைத் தரக்குறைவாகப் பேசி செருப்பை கழற்றச் சொன்னதாகப் புகார் அளித்துள்ளார்.

நேற்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள தெப்பக்காடு பகுதியில் யானைகள் புத்துணர்வு முகாம் ஒன்று நடந்தது.  இதற்காக தமிழக அமைச்சர் சீனிவாசன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னொசெண்ட் திவ்யா மற்றும் பல அரசு அதிகாரிகளும் ஆளும் கட்சியினரும் வந்திருந்தனர்.   இந்த விழாவைக் காணப் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு கேத்தன் என்னும் மாணவரும் சென்றிருந்தார்.

யானைகள் புத்துணர்வு முகாமில் உள்ள விநாயகர் கோவில் முன்பு அமைச்சர் சீனிவாசன் மாணவர் கேத்தனை, ”டேய் இங்கு வாடா.   என் காலில் உள்ள செருப்பை கழற்றுடா” எனக் கூறியதாகச் சொல்லப்படுகிறது.   அமைச்சர் சொல்கிறார் என்பதற்காக அவருடைய செருப்பை அத்தனை பேர் முன்னிலையில் மாணவர் கேத்தன் கழற்றி உள்ளார்.

14 வயதே ஆன அந்த மாணவர் இதனால் மிகவும் அவமானம் அடைந்து வீட்டிலேயே அடைந்து கிடந்துள்ளார்.   ஆனால் அவருடைய பெற்றோர்கள் மற்றும் பழங்குடியினர் முன்னேற்றச் சங்கத்தினர் ஆறுதல் கூறி உள்ளதால் மனம் தேறி  புகார் அளித்துள்ளார்.

மாணவர் கேத்தன் தனது புகாரில் அமைச்சர் சீனிவாசன் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை த்டுப்பு திருத்ஹ்ட சட்டத்தின்கிழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனக்குப் பாதுகாப்பு வழங்கும் படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வு குறித்து சமூக ஆர்வலர்கள், “அமைச்சருக்கு எதிராகப் புகார் கொடுத்த தைரியத்திற்காகவே செல்வன். கேத்தனுக்கு அரசு விருது வழங்கலாம். இந்த கொடுஞ்செயலை வேடிக்கை பார்த்த ஆட்சியர் இன்னொசென்ட் திவ்யா மற்றும் அரசு அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.