ஈரோடு: அரசு பள்ளிகளில் செப்டம்பர் வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று கூறிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், அனைத்து ஆசிரியர்களும் பணிக்கு வர வேண்டும் என்று கூறினார்.

கொரோனா தொற்று காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கொரோனா பொருளாதார நெருக்கடி காரணமாக, அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், சேர்க்கை மற்றும், சான்றிதழ் வாங்குவதற்கு தலைமையாசிரியர்கள் பணம் வாங்குவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொளப்பலூரில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

நடப்பாண்டில் அரசுப் பள்ளிகளில் கூடுதலாக மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. அரசு பள்ளி யில் மாணவர் சேர்க்கை மற்றும் மாற்றுச்சான்றிதழ் வழங்க ஒரு ருபாய் கூட வசூலிக்கப்படுவ தில்லை.

தனியார் பள்ளிகளில் பள்ளி கட்டணம் தொடர்பாக பெற்றோர்களை கட்டாயப்படுத்தினால் சம்பந் தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பெற்றோர்கள் நெருக்கடி கொடுக்கும் பள்ளிகள் மீது எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கலாம். அவ் வாறு  புகாரளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு 14 வகையான பொருட்கள் வழங்கப்படுவதாலும், மாணவர் சேர்க்கை நடைபெறுவதாலும் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்.

கொரோனா தொற்று இருப்பதால் செப்டம்பர் வரை மாணவர் சேர்க்கை நடைபெறும். தற்போது வரை  ஒன்றாம் வகுப்பில் 1.72 லட்சம் குழந்தைகள் கூடுதலாக பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தனியார் பள்ளியில் இருந்தும் அரசு பள்ளிக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுபோல,  அனைத்து மாணவர்களுக்கும் வழங்க தேவையான பாட புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளது.

நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்பாடு குறித்து முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுப்பார்.

இவ்வாறு கூறினார்.