சென்னை: அர்ச்சகர் பயிற்சிக்கு விரைவில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் 2006ஆம் ஆண்டு  கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து திருச்செந்தூர், திருவண்ணாமலை, பழனி, மதுரை ஆகிய இடங்களில் சைவ சமயக் கோயில்களுக்கான அர்ச்சகர் பயிற்சி மையங்களும், ஸ்ரீரங்கம், திருவல்லிகேனி ஆகிய இடங்களில் வைணவத்திற்கான அர்ச்சகர் பயிற்சி மையங்களும் தொடங்கப்பட்டன. ஆனால், அதன்பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுக, அந்த சட்டத்தை கிடப்பில் போட்டது.

தற்போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், மீண்டும் அர்ச்சகர் பயிற்சி தொடங்கப்படும் என்று  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருந்தார்.

இந்த  நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,  அர்ச்சகர் பயிற்சிகான பள்ளிகள் புணரமைக்கப்பட்டு புதிய மாணவர்கள் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அதற்கான  விண்ணப்பங்கள் கோரப்படும் என்றார். மேலும், ஏற்கனவே அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைவரும் அர்ச்சகர் பணியில் அமர்த்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.