சென்னை: ரேஷன் கடைகளில் , பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களை ஏதேனும் காரணம் கூறி அலைக்கழித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
கொரோனா தொற்று காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், அரசு வழங்கும் உணவுப்பொருட்களை பெற ஏழை மக்கள் ரேசன் கடைகளை நாடி வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு உரிய உணவுப்பொருட்கள் வழங்கப்படுவது இல்லை. ரேகை சரியில்லை, அது சரியில்லை, இது சரியில்லை பல முறை, பொதுமக்களை நாளைக்கு வா, அடுத்த வாரம் வா என ரேசன் கடை ஊழியர்கள் விரட்டியும், அலைக்கழித்தும் வருகின்றனர். இது தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்துள்ளது.
இதையடுத்து, ரேஷன் கடைகளில் பொதுமக்களை அலைக்கழித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நியாய விலைக்கடைக்கு வர இயலாத முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் அத்தாட்சி செய்யப்பட்ட நபரின் விவரத்தைப் பதிந்து பொருட்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான படிவங்களை ரேசன் கடைகளில் இருப்பு வைத்து தேவைப்படும் அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்கடையிலேயே பூர்த்தி செய்ய வேண்டும் எனவும், இதை மீறி பொதுமக்களை அலைக்கழித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.