சென்னை: பள்ளிகள், கல்லூரிகள் அருகே போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தமிழகத்தில் போதை பொருள் முற்றிலும் தடுக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று 2021 – 2022 ஆம் ஆண்டுக்கான தொழிற்துறை (சுரங்கங்கள் – கனிமங்கள்), தமிழ்வளர்ச்சித்துறை தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
சட்டமன்றப் பேரவையில், இன்றைய வினா-விடை நேரத்தில், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக பாமக உறுப்பினர் ஜி.கே.மணி கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை முற்றிலும் தடுக்க தமிழக அரசு முன்வருமா? என்றார்.
இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் போதை பொருட்கள் விற்பனை முற்றிலும் தடுக்கப்படும் என்றும், தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்போர், கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 149.43 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, 11,247 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குட்கா விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறையினரை ஊக்குவிக்க தமிழக அரசு நிச்சயம் தயங்காது என்று கூறினார்.
மேலும், தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் அருகே போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடுமையான தண்டனை வழங்க சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் கூறினார்.