சென்னை: விழுப்புரத்தில் அமைக்கப்பட்ட  ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பு தொடர்பான மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதிமுக ஆட்சியில் விழுப்புரத்தில்  ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. ஏற்கனவே வேலூரில் இருந்த திருவள்ளுவர் பல்கலைக்கழ கத்தை இரண்டாக பிரித்து, ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. ஆனால், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி ஏற்wதும், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை ரத்து செய்யும் முடிவை அறிவித்தது. இது தொடர்பாக உயர்கல்வித்துறை மானிய கோரிக்கையின்போதும் விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்றைய கூட்டத்தில்  ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கும் மசோதாவை, சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார்.  இதற்கு எதிர்க்கட்சியான அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர், பின்னர், எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக தெரிவித்து,  இந்த மசோதாவை கண்டித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர். சட்டப்பேரவையின் எதிரே உள்ள வாலாஜா சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய பேரவை கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.