சென்னை

முழு ஊரடங்கு நாட்களில் ஆடோ மற்றும் டாக்சிகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்

sample photo

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் பல கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  அவ்வகையில் இரவு நேர ஊரடங்கு மற்றும்  ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.   சென்ற 9 மற்றும் 16 தேதிகளில் முழு ஊரடங்கு அமலில் இருந்தது.  இந்த ஊரடங்கு ஜனவரி 31 அவரை அமலில் இருக்கும்.

இந்த இரு முழு ஊரடங்கு நாட்களில் வெளியூரில் இருந்து வருபவர்களில் பலர் ஆட்டோ மற்றும் டாக்சிகள் கிடைக்காமல் அவதியுற்றனர்.   ஒரு சில இடங்களில் ஆட்டோ மற்றும் டாக்சிகள் அதிக கட்டணம் வசூலித்ததாகவும் புகார்கள் எழுந்தன.  இது குறித்து சென்னை நகர டிஜிபி சைலேந்திரபாபு இன்று காவல்துறையினருக்கு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாகக் கடந்த ஜன.09 மற்றும் ஜன.16 என முழு ஊரடங்கு அமலாக்கப்பட்ட இரு தினங்களிலும் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் காவல்துறையினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளீர்கள்.

முழு ஊரடங்கு காலத்தில் சிலர் காவல்துறையினரைத் தாக்கிய போதும் காவலர்கள் துறைக்குரிய பொறுப்புடன் பணியாற்றியுள்ளீர்கள்.  அதற்குப் பாராட்டுகள்.  ஆயினும்,முழு ஊரடங்கு நாட்களில் வெளியூர் சென்று திரும்பும் பயணிகள் ஆட்டோ,டாக்சிகள் கிடைக்காமல் அவதியுற்றதாகவும்,சில ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் வந்துள்ளன. 

ஆகவே,வெளியூர் சென்று திரும்பும் பயணிகளுக்கு ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தில் ஆட்டோ,டாக்சிகள் கிடைப்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்த வேண்டும்.   முழு ஊரடங்கு நாட்களில் ஆட்டோ மற்றும் டாக்சிகள் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”, எனத் தெரிவித்துள்ளார்.