டெல்லி: தெருநாய்கள் விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, பிரமான பத்திரம் தாக்கல் செய்யாத தமிழ்நாடு உள்பட 25 மாநில தலைமைச் செயலாளர்கள் அடுத்த விசாரணையின்போது நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெருநாய்கள் பிரச்னை தொடா்பான வழக்கில் தமிழகம் உள்பட அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களும் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நவ. 3 ஆம் தேதி நேரில் ஆஜராகி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாததற்கான விளக்கத்தை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதுதொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன. இதற்கிடையில், தலைநகர் டெல்லியில் தெருநாய்கள் தொல்லை தொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்தப்பிரச்னை தொடா்பாக தனித்தனியாக 4 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா ஆகிய மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த விசாரணையை தொடர்ந்து (ஆக.22-ஆம் தேதி) பிறப்பித்த உத்தரவில், டெல்லி மற்றும் தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பகுதியில் தெரு நாய்களைப் பிடித்து அவற்றுக்கு கருத்தடை, புழுநீக்கம் செய்து, தடுப்பூசி செலுத்திய பின்னா், பிடிக்கப்பட்ட இடங்களிலேயே மீண்டும் அவற்றை விடுவிக்க வேண்டும் என்ற உத்தரவில் மாற்றம் செய்தது.
மேலும், தெருநாய்கள் தொடர்பாக, நாடு முழுவதும் உயா்நீதிமன்றங்களில் உள்ள அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற முடிவு செய்த 3 நீதிபதிகள் அமா்வு, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை வழக்கில் ஒரு தரப்பாகச் சோ்த்தது. அனைத்து மாநிலங்களும் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றதில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, தெலங்கானா, மேற்கு வங்கம் மற்றும் டெல்லி மாநகராட்சி நிர்வாகம் மட்டுமே பிரமான பத்திரம் தாக்கல் செய்தது. மற்ற மாநிலங்கள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவில்லை. இதனால் கோபமடைந்த நீதிபதிகள், மற்ற அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த தலைமைச் செயலாளர்களும் வருகின்ற நவ. 3 ஆம் தேதி நேரில் ஆஜராகி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாததற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.