டெல்லி: நாடு முழுவதும் அதிகரித்து வரும் தெருநாய் தொல்லைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த  சிவகங்கை எம்.பி.யான கார்த்தி சிதம்பரம் பிரதமர் மோடியை சந்தித்து மனு அளித்தார். இது அரசியல் களத்தில், தலைவர்களின்  புருவங்களை உயர்த்த வைத்துள்ளது.

“தெருநாய் அச்சுறுத்தலை சமாளிக்க தேசிய பணிக் குழு தேவை”  பிரதமர் மோடியிடம்  காங்கிரஸ் எம்.பி. நேரரில் முறையிட்டார்.

இது தொடர்பாக  கார்த்தி சிதம்பரம்  தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  “இன்று (நேற்று)  பிரதமரை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து, தெருநாய்களால் அதிகரித்து வரும் உடல்நல பாதிப்பு மற்றும் பாதுகாப்பு கவலைகள் குறித்து அவரது கவனத்துக்குக் கொண்டு வந்தேன். உலகளவில் தெருநாய்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

இந்தியாவில், 6.2 கோடிக்கும் அதிகமான தெருநாய்கள் உள்ளன. இந்தியாவில் ரேபிஸ் நோய் பரவல் அதிகம் காணப்படுகிறது. உலகின் ரேபிஸ் தொடர்பான இறப்புகளில் 36% இந்தியாவில் நிகழ்கின்றன. விலங்கு பிறப்பு கட்டுப்பாடு விதிகள் 2023-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், செயல்பாட்டில் அது பயனற்றதாக உள்ளது.

தற்போதைய அமைப்பின் போதாமை குறித்து நான் கவலைகளை எழுப்பினேன். உள்ளூர் அமைப்புகளுக்கு இந்தப் பிரச்சினையை திறம்பட சமாளிக்க வளங்கள், நிதி மற்றும் தொழில்நுட்பம் இல்லை. அவசர நடவடிக்கை தேவை என்பது தெளிவாகிறது.

இப்பிரச்சினைக்கு முழுமையான, மனிதாபிமான மற்றும் அறிவியல் தீர்வை வழங்க ஒரு தேசிய பணிக்குழுவை நிறுவுமாறு நான் பரிந்துரைத்தேன். மேலும், இந்த சவாலை எதிர்கொள்ள ஒரு நீண்டகால திட்டம் இருக்க வேண்டும்”

இவ்வாறு கூறியுள்ளார்.

ஏற்கனகே கேரள காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் உள்பட சில காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமர் மோடியின் செயல்பாடுகளை அவ்வப்போது பாராட்டி வரும் நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பிரதமரை திடீரென சந்தித்து பேசியது விவாதப்பொருளாக மாறி உள்ளது. கார்த்தி சிதம்பரம் ஏற்கனவே நீட் தேர்வுக்கு ஆதரவாக பேசியதுடன், அவ்வப்போது  திமுகஅரசின் நடவடிக்கைகளையும் விமர்சித்து வரும் நிலையில், அவரது திடீர் பிரதமர் உடனான  சந்திப்பு சலசலப்பை உருவாக்கி உள்ளது.

[youtube-feed feed=1]