சென்னை: சிங்கப்பூரில் சிக்கித் தவித்த முருகன் என்ற தமிழரை தாய்நாட்டிற்கு அழைத்துவரும் முயற்சியில், விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு, தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி ஆகியோர் தனிப்பட்ட அக்கறை எடுத்து பங்கேற்ற தகவல் வெளியாகியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் சிங்கப்பூரில் பணியாற்றி வந்தார். அவர், ஏற்கனவே உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்பட்டு, தாய்நாடு திரும்ப எத்தனித்த சூழலில், கொரோனா ஊரடங்கு இடையில் வந்துவிட, சிங்கப்பூரிலேயே அவர் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.

மாதக்கணக்கில் சிங்கப்பூரில் சிக்கித் தவித்த அவரை மீட்க, அவரின் குடும்பத்தினர் பெரும் முயற்சி எடுத்துவந்தனர்.

விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு, தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி ஆகியோரின் உதவியை நாடினர்.

இந்நிலையில், மாணிக்கம் தாகூர், தமிழர் முருகனை மீட்க வேண்டி, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சிங்கப்பூருக்கான இந்திய ஹை கமிஷனர் ஜாவித் அஷ்ரஃப் ஆகியோருக்கு உடனடியாக கடிதம் எழுதினார்.

தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சிங்கப்பூருக்கான இந்திய ஹை கமிஷனர் ஜாவித் அஷ்ரஃப் ஆகியோருக்கு முருகனை உடனடியாக மீட்க வலியுறுத்தி உடனடியாக கடிதம் எழுதினார்.

ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ் கனியும் மீட்பிற்கு உரிய முயற்சிகளை உடனடியாக மேற்கொண்டார்.

தங்களின் துயரக் குரலுக்கு செவிசாய்த்த திமுக கூட்டணியைச் சேர்ந்த மேற்கண்ட 4 மக்கள் பிரதிநிதிகளுக்கும், சிங்கப்பூரில் சிக்கியுள்ள முருகனின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.