தனக்குத் தானே தண்டனை அளித்துக் கொண்ட மதுரை நீலகண்ட தீட்சிதர்
ஆன்மிக உலகில் மிகப் பெரியவராகவும் பெரும் புலவராகவும் திகழ்ந்த அப்பைய தீட்சிதரின் தம்பி பேரன் நீலகண்ட தீட்சிதர்.அவர் சிறந்த சக்தி உபாசகர்; முக்காலம் உணர்ந்த ஞானி; அற்புதக் கவிஞர். இவர்தம் பெருமை உணர்ந்த திருமலை நாயக்கர்(மதுரை மன்னர்)தம் அரசவைக் கவிஞராக்கிப் பின் அமைச்சராக்கிக் கொண்டார்.தம் பணியைச் செவ்வனே
செய்தாலும் அம்பாள் உபாசனையில் ஈடுபட்ட வண்ணமே இருந்தார்;தேவி
மீனாட்சியிடம் அளவற்ற பக்தி கொண்டு இருந்தார்.
திருமலை நாயக்கர் மதுரையில் புது மண்டபம் கட்டினார்.தம் மனைவியர் சிலைகளை நிறுவத் திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்திருந்தார்.பட்டத்து ராணி சிலையைச் சிற்பி வடித்த போது சிலையின் தொடைப் பகுதியில் ஒரு சில்லு பெயர்ந்தது. மீண்டும் செய்த  போதும் அவ்வண்ணமே நிகழ்ந்தது.   அப்போது அவ்வழியே வந்த தீட்சிதர் சிற்பியின் கவலையை விசாரித்து
அப்படியே இருக்கட்டும் என்றார் சாமுத்ரிகா லட்சணம் உணர்ந்ததால்.
சாமுத்ரிகா லட்சணம் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ,  ஒரு விரலையோ , முகத்தையோ, முடியையோ பார்த்து வடிவம் இப்படி என்று உணர்த்துவது.  மறுநாள் அரசன் வந்து பார்த்துச் சிலையில் ஒரு சில்லு பெயர்ந்து உள்ளது பற்றி விசாரிக்கச் சிற்பி நடந்தது குறித்துச் சொன்னான். அரசியின் அந்த இடத்தில் மச்சம் இருப்பது தீட்சிதருக்கு எப்படித் தெரிந்தது என்று ஐயம் கொண்டார்.
சந்தேகம் அதிகமான நாயக்கர்,  தீட்சிதர் கண்களைக் குருடாக்க உத்தரவு போட்டார்.
அரச உத்தரவை நிறைவேற்றக் காவலன் வருவதைப் பூசையில் இருந்தவண்ணம் உணர்ந்த தீட்சிதர், கற்பூர ஜோதியைக் கண்களில் அப்படியே ஒற்றிக் கண்களை இழந்து,காவலனிடம் அரச உத்தரவை நானே நிறைவேற்றிக் கொண்டேன்  என்று கூறப் பணித்தார்.
நடுங்கிய  காவலன் நடந்ததைக் கூற மன்னன் பயந்து ஓடி வந்து மன்னிக்க வேண்டி மன்றாடினான்.சாமுத்ரிகா லட்சணம் பற்றிக் கூறி மன்னனை அனுப்பிய தீட்சிதர் ‘ஆனந்த சாகர ஸ்தவம்’  என்ற கவிதைப் பனுவலை வடமொழியில் பாடினார்.
உருக்கமான அந்தப் பனுவலில்,தாயே! என் மீது கருணை கொண்டு,காட்சி கொடுத்தாலும், உன்பாதமலர் அழகை எந்தக் கண்கொண்டு பார்ப்பேன் என்று உருகிப் பாடியதும் அம்மையின் அருளால் கண்கிடைத்தது.அரசனும் மற்றவர்களும் மகிழ்ந்தனர்.
சில ஆண்டுகளுக்குப் பின் பணியை விட்டு விலகி, திருநெல்வேலிக்கு அருகில் உள்ள பாலாமடை என்னும் ஊரில் ஞான யோகத்தில் இருந்து முத்தி பெற்றார்.ஆன்மிக உலகமும் வடமொழி இலக்கிய உலகமும் மறக்க முடியாத மாமனிதர் நீலகண்ட தீட்சிதர்