விஜயதசமி : வரலாறு மற்றும் முக்கியத்துவம்


விஜயதசமி   இந்தியா, நேபாளம் மற்றும் வங்காள தேசத்தில் பல்வேறு வடிவங்களில் கொண்டாடப்படும் ஓர் மழைக்கால இந்து சமய விழாவாகும். இது தசரா என்றும் அழைக்கப்படுகிறது. தென்னகப் பகுதிகளில் நவராத்திரியின் ஓர் அங்கமாகவும், வங்காளத்தில் துர்கோத்சவத்தின் அங்கமாகவும் கொண்டாடப்படுகின்றது.
இந்து நாள்காட்டியில் புரட்டாசி மாதத்தின் அமாவாசை கழிந்த பத்தாம் நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. முந்தைய ஒன்பது நாட்களும், நவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

ராமாயணத்தில், ராவணன் சீதையைக் கடத்தினான். சீதையை விடுவிக்குமாறு ராமன் ராவணனிடம் கோரினார், ஆனால் ராவணன் மறுத்துவிட்டார். இந்நிலைமை அதிகரித்து போருக்கு வழிவகுத்தது. இப்போரில் இராமன், இராவணனை, விஜயதசமியன்று அழித்து போரில் வெற்றிபெற்றார் என்று கூறப்படுகிறது.
வட இந்தியப் பகுதிகளில் ராமன் ராவணனைக் கொன்ற இந்நாளை, ராம்லீலா என்ற விழாவாகக் கொண்டாடப்படுகிறது. பெருந்திரளான மக்கள் மைதானத்தில் கூடி இராவணன் மற்றும் அவனது சுற்றத்தினது உருவபொம்மையை இராமர் வேடம் தரித்தவரால் அம்பெய்யப்பட்டு எரியூட்டப்படுகிறது.
மகாபாரதத்தில் ஆட்சி, அதிகாரம், நாடு உள்பட சகலமானதையும் இழந்த பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம், ஓராண்டு மறைவு வாழ்க்கை முடிந்து, மீண்டும் அனைத்து ஆயுதங்களையும் தாங்கள் இழந்த பலம் ஆகியவற்றையும் விஜயதசமியன்று பெற்றனர் என்று கூறப்படுகிறது.

 
தமிழகத்தில் விஜயதசமி அன்று, மழலை குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடனப் பயிற்சி, பிறமொழிப் பயிற்சி, புதிதாக ஒரு தொழிலைக் கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
இதற்கு முந்தைய நாளான நவமியில் சரசுவதியை வணங்கி கல்வி, கலை கருவிகளுக்குப் பூசை நடத்தி தசமி அன்று ஆயுதபூசை என தாங்கள் பயன்படுத்தும் தொழிற்கல்விகளுக்கும் வாகனங்களுக்கும் பூசை நடத்துகின்றனர்.