சென்னை:  வங்கக் கடலில் உருவாகவுள்ள புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் என தமிழ்நாடு அமைச்சர்கள்  கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு தெரிவித்து உள்ளனர்.

15 ஆயிரம் மின்வாரிய ஊழியர்கள்; 3 லட்சம் மின் கம்பங்கள் தயாராக உள்ளதாக மின்சாரத்துறை  அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து உள்ளார்.

மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் வங்கக் கடலில் உருவாகவுள்ள புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளதாக  தெரிவித்து உள்ளார்.

அதுபோல, புயல் பாதிப்புகளை சமாளிக்க ஏடிஜிபி தலைமையில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு தயார்  என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 06 மணி நேரத்தில் மணிக்கு 18 கி.மீ வேகத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று, புதுச்சேரிக்கு கிழக்கு – தென்கிழக்கே சுமார் 440 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு – தென்கிழக்கே 510 கி.மீ. தொலைவிலும், நெல்லூருக்கு தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவிலும், பாபட்லாவில் இருந்து தெற்கு – தென்கிழக்கே 710 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்திலிருந்து தெற்கு -தென்கிழக்கே 710 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட வடகடலோர பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை உருவாகும் மிக்ஜாம் புயல் தீவிர அல்லது அதி தீவிர புயலாக மாறுமா என்பது தொடர்பாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை அது புயலாகவே கரையை கடக்கும் என கூறப்படுகிறது.

முன்னதாக நேற்று தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உள்பட சில மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, அனைவரும், அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து களத்தில் பணியாற்றி, புயலை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து, இன்று  மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில்  ஆய்வு செய்த தமிழ்நாடு, பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ராமச்சந்திரன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வங்கக் கடலில் உருவாகவுள்ள புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளதாக  கூறிய அமைச்சர், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக கூறினார். மேலும், புயல் முன்னெச்சரிக்க நடவடிக்கையாக  மண்டல அலுவலர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் களத்திற்குச் செல்ல முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக கூறியவர், சென்னையில் மட்டும் 162 சமுதாயக் கூடங்கள் தயாராக உள்ளன என்றும் கூறினார்.

இதுபோல, புயல் எச்சரிக்கை காரணமாக நுங்கம்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் தங்கம் தென்னரசு, மின்வாரியம் சார்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்போது,  ”புயல் முன்னெச்சரிக்கையாக மின் வெட்டு ஏதும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்புயல் நேரத்தில் மின்கசிவு காரணமாக உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

மருத்துவமனைகள் அரசு அலுவலகங்கள் உள்ள இடங்களில் மின்சாரம் தடைப்படாமல் இருக்க அறிவுறுத்தியுள்ளோம். மாவட்டம் தோறும் இருக்கும் கட்டுப்பாட்டு மையங்களில் மின்சார துறை அலுவலர்கள் பொறியாளர்கள் களத்தில் பணியாற்றி வருகின்றனர். தமிழகம் முழுவதும் 3 லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளது. 15600 பேர் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். கன மழை பெய்யக்கூடிய மாவட்டங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மழை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து பொருட்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மின்னகத்திற்கு வரும் அழைப்புகளை உடனடியாக எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம். எந்த இடத்தில் புகார்கள் அதிகளவில் வருகிறது என்பதை ஆய்வு செய்ய தெரிவித்துள்ளோம். 94 இடங்களில் மின் வாரிய வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மழையின் அளவை பொறுத்து கூடுதலாக அலுவலர்கள் தேவைப்பட்டால் மற்ற மாவட்டங்களில் இருந்தும் வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

தமிழகத்தில் `மிக்ஜாம்’ புயல் பாதிப்பை எதிர்கொள்ள முழு வீச்சில் தயாராகி வரும் தமிழக போலீசார் புயல் பாதிப்புகளை சமாளிக்க ஏடிஜிபி தலைமையில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு  அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் பல்வேறு பகுதிகளாக பிரிந்து பல்வேறு இடங்களில் முகாமிட்டு உள்ளனர். நிலச்சரிவு, மழை, வெள்ளம் போன்ற அசாதாரண சூழல்களை எதிர்கொள்ளும் பயிற்சி பெற்ற 900 போலீசார் 18 குழுக்களாக அனுப்பப்பட்டுள்ளனர். அதன்படி,  சென்னை, கோவை, மணிமுத்தாறு பகுதிகளுக்கு தலா 3 குழுக்களும், கடலூருக்கு 2 குழுக்களும் அனுப்பி வைப்பு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகை, பழனி பகுதிகளுக்கு தலா ஒரு மீட்புக்குழு அனுப்பப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளத.

மேலும்,  164 மீட்பு உபகரணங்கள் மற்றும் 20 படகுகள் தயார் நிலையில் இருப்பதாக தகவல் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்ட எஸ்பிக்கள் உடனும் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி பெற்ற 18,000 போலீசாரும் தயார் நிலையில் உள்ளதாக காவல்துறை வெளியிட்டுள்ள தகவலில்  தெரிவிக்கப்பட்டு உள்ளது.