சென்னை:

 நாளைமுதல் முந்தைய ஊரடங்கு முறையே தொடரும் என்று அறிவித்துள்ள தமிழக அரசு 30ந்தேதி மட்டும்  மாலை 5மணி வரை கடைகள் திறக்க அனுமதி வழங்கி உள்ளது.

மிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்குமே3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவலை மேலும் தடுக்கும் வகையில், மக்கள் வீட்டிலேயே இருக்கும்படி, சென்னை, கோவை, மதுரை ஆகிய  3 மாவட்டங்களுக்கு 4 நாட்கள் முழு ஊரடங்கும், சேலம்,  திருப்பூரில் 3 நாள் முழு ஊரட்ங்கும் அமல்படுத்தப்பட்டது.

சேலம், திருப்பூரில் நேற்று இரவுடன் முழு ஊரடங்கு முடிவடைந்த நிலையில், அங்கு ஏற்கனவே இருந்த முறைப்படி மதியம் 1 மணி வரை அத்தியாவசியப்பொருட்கள் விற்பனை கடைகள் திறக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், சென்னை, கோவை, மதுரை  இன்று இரவுடன் முழு ஊரடங்கு விலக்கப்படுகிறது. அதையடுத்து, ஏற்கனவே உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்று தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சி பகுதிகளில் இன்ற இரவு வரை அமலில் இருக்கும் முழு ஊரடங்கு முடிவடையும் நிலையில் நாளை முதல் 26ந்தேதிக்கு முன்பு இருந்த நிலைப்படி ஊரடங்கு தொடரும்.

எனினும், வரும் 30ந்தேதி (வியாழக்கிழமை) அன்று மட்டும் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களான காய்கறி, பழங்கள், மளிகைப் பொருட்கள் வாங்குவதற்கு ஏற்ப காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அத்தியாவசியப் பொருட்கள் கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்படும்.

பொதுமக்கள் அவசரம் காட்டாமல் நிதானமாக சமூக விலகளை கடைபிடித்து பொருட்களை வாங்கிச்செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.