விபத்துக்கள் காணொளி அல்ல? அதை ஸ்மார்ட் போனில் படம் எடுப்பதையும், வலை தளங்களில் பதிவேற்றுவதையும்  உடனே நிறுத்துங்கள்….

சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை பார்வையிடுபவர்கள், விபத்தினால் பாதிக்கப்பட்டவர் களுக்கு  உதவி செய்வதை விடுத்து, விபத்து ஏற்பட்டு காயமடைந்தவர் உடலில் இருந்து வெளி யாகும் ரத்தம், காயமடைந்தவரின் வேதனை போன்றவற்றை படம், வீடியோ எடுப்பதை உடனே நிறுத்துங்கள் என வேண்டப்படுகிறார்கள்.

கர்நாடகாவில் பேருந்து மோதி விபத்துக்குள்ளான ஒருவர் சாலையில் ரத்த வெள்ளத்தில் மிதப்பதை காணும் அந்த வழியே செல்பவர்கள்  தங்களது போனில் படமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து சமூக வலை தளங்களில் பரப்பி உள்ளார்கள்.

அவரை காப்பாற்ற யாரும் முயற்சி செய்யவில்லை. இதன் காரணமாக அவரது உயிர் பிரிந்தது.

விபத்துக்குள்ளானவர்களை உடடினயாக மருத்துவமனைக்கு நாமே கொண்டு செல்ல முடியும். மருத்துவ உதவியாளர்கள் வந்துதான் கொண்டு செல்ல வேண்டும் என்பதில்லை. ஆனால் அதை செய்ய ஒருவரும் முன்வருவதில்லை.

ஏப்போதாவது அதிகமான காயங்களால் மோசமான நிலையில் விபத்துக்குள்ளானவர் இருக்கும் பட்சத்தில் அவருக்கு தேவையான உதவியை அருகிலிருந்து செய்வதுதான் சிறப்பு.

அதுபோல நேரங்களில் நாம் ஆம்புலன்சை வரவழைத்து உதவி செய்யலாம்.  ஒருவேளை ஆம்புலன்சு வர தாமதமானால், அதுவரை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவி செய்யலாம். இதுதான் மனிதாபிமானம்….

ஆனால், நடப்பது என்ன? விபத்தில் காயம் ஏற்பட்டு வலியால் துடித்துக்கொண்டிருப்பவரை, அவரது வேதனையை  படமாகவோ அல்லது வீடியோவாக தமது செல்போனில் பதிவு செய்து, அதிலும் காயம் பட்ட பகுதிகளை ஜூம் செய்து பதிவு செய்து, அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றும் வக்கிரமான செயல் நடைபெற்று வருகிறது.

ஒரு சாலை விபத்தை காண நேரிடும்போது, பார்வையாளரான நமது வேலை, காயமடைந்த நபருக்கு சிறந்த உதவி செய்வது மற்றும் உடனடியாக ஆம்புலன்சை வரவைழைக்க ஏற்பாடு செய்வதுதான் நமது கடமை.

கர்நாடக விபத்தில் பாதிக்கப்பட்டவர்  கொப்பல் மாவட்டத்தை சேர்ந்த அன்வர் அலி என்ற 18 வயது இளைஞர். குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபர். சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது கர்நாடக மாநில அரசு பேருந்தினால் இடித்து தள்ளப்பட்டார்.

சாலை ஓரம் கீழே விழுந்த அலி ரத்த வெள்ளத்தில் மிதந்தார், உடனடியாக விழுந்த இடத்தில் தனக்கு ஏற்பட்டுள்ள வலி குறித்து எழுதியும், கத்தியும் உதவி கேட்டார்.

ஆனால், அவரை சுற்றி நின்றவர்கள்  அதை யாரும் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்த்னர். அவரை சுற்றி நின்று தனது ஸ்மார்ட் போனில் வீடியோவாக எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

இந்த விபத்து காலை 8.40 மணிக்கு நடைபெற்றது. அடுத்த அரைமணி நேரத்தில் (9.10) அந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் வந்துவிட்டது.  உடனடியாக அலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

விபத்து காரணமாக அதிக ரத்தம் வீணாகியதால், அறுவை சிகிச்சைக்கு  உடனே 7 பாட்டல் ரத்தம் தேவை என மருத்துவமனை கோரியது.

ஆனால், துரதிருஷ்டவசமாக பலத்த காயம் அடைந்திருந்த அலி  பிற்பகல் 2 மணி  அளவில் மரணமடைந்தார்.

மரணமடைந்த வாலிபர் அலி, தேவராஜ் அர்ஸ் பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார்.

மக்களின் மனிதநேயமற்ற செயலால் ஒரு அப்பாவி வாலிபரின் உயிர் பறிபோனது.

இதுபோல விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றாமல்,  தங்களது செல்போன்களில் படமாகவோ, வீடியோவாகவோ எடுப்பது எந்த வகையில் நியாயம்…

நமது மக்களின் மன நிலை எங்கே செல்கிறது? மக்களின் இந்த விபரீதமான  மோகத்தின் காரணம் என்ன?

ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளேயே ஆய்வு செய்யவேண்டிய தருணம் இது….

விஞ்ஞான வளர்ச்சியின் பயனாக நமக்கு கிடைத்துள்ள அரிய கருவியாக ஸ்மார்ட் போனை ஆக்கப்பூர்வமாக உபயோகிக்க பழகுங்கள்….

இதுபோன்ற வக்கிரமான காரியங்களுக்கு உபயோகப்படுத்துவதை  தவிர்க்க முயலுங்கள்… தவிர்க்கப்பட வேண்டும்.