டொரோண்டோ :
குளோபல் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் ப்ராஸஸிங்   (ஜிஇஇபி / GEEP ) எனும் மறுசுழற்சி செய்யும் நிறுவனத்துக்கு அனுப்பிய ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஆப்பிள் ஐ-போன், ஐ-பேட் மற்றும் ஆப்பிள் வாட்ச்களை திருடி மறுவிற்பனை செய்ததாக ஜிஇஇபி மீது ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.
கனடாவைச் சேர்ந்த ஜிஇஇபி எனும் நிறுவனம் காலாவதியான, சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தக்கூடிய ஆப்பிள் நிறுவனத்தின் எலக்ட்ரானிக் பொருட்களை ஒப்பந்த அடிப்படையில் மறுசுழற்சி செய்து தரும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதனடிப்படையில், கடந்த 2015 ஜனவரி முதல் 2017 டிசம்பர் வரையிலான இரண்டாண்டு காலகட்டத்தில் 5,31,966 ஐ-போன்கள், 25,673 ஐ-பேட்கள் மற்றும் 19,277 ஆப்பிள் வாட்ச்களை மறுசுழற்சிக்காக ஆப்பிள் நிறுவனம் அனுப்பியுள்ளது, இதில் 1,03,845 ஆப்பிள் நிறுவன பொருட்கள் களவு போனது ஜிஇஇபி நிறுவனத்தில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூபாய் பதினோரு லட்சம்.
இதனை ஜிஇஇபி நிறுவனமும் தார்மீக அடிப்படையில் ஒப்புக்கொண்ட போதும், இது தங்களுக்கு தெரியாமல் தங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்த மூன்று ஊழியர்கள் இதனை திருடியிருக்கிறார்கள் என்று கூறியது.

இந்த விளக்கத்தை ஏற்கமறுத்த ஆப்பிள் நிறுவனம், அந்நிறுவனம் குறிப்பிட்ட அந்த மூன்று பேரும் நிறுவனத்தின் உயர்பொறுப்பில் இருக்க கூடியவர்கள் என்றும் இதற்கு நிறுவனம் தான் பொறுப்பேற்க வேண்டும் மேலும் இழப்பீடாக 166 கோடி ரூபாய் கேட்டு வழக்கு தொடுத்துள்ளது.
ஒரு லட்சத்திற்கும் அதிகமான தங்கள் நிறுவன தயாரிப்புகள் மறுசுழற்சி செய்யப்படாமல் மறுவிற்பனை செய்ததுடன் அந்த பொருட்கள் தொலைத்தொடர்பு சேவையில் மீண்டும் தொடர்வதை ஆதாரபூர்வமாக வழக்கில் சேர்த்துள்ள ஆப்பிள் நிறுவனம். மறுசுழற்சிக்கு அனுப்பிய இந்த பொருட்கள் மறுவிற்பனை செய்யப்பட்டுள்ளதால் இது எந்த நேரத்திலும் பேட்டரி செயலிழப்பு உள்ளிட்ட ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்றும் அச்சுறுத்தியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த இழப்பீட்டை எதிர்த்து பதில் மனு தாக்கல் செய்துள்ள ஜிஇஇபி, தங்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை தங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களே இதற்கு காரணம், அவர்களிடம் தான் இந்த இழப்பீடுத் தொகையை வசூலிக்க வேண்டும் என்று  கூறி அவர்களைத் தேடி வருகிறது. 11 லட்ச ரூபாய் பெறுமானமுள்ள பழைய பொருட்களை களவாடி மறுவிற்பனை செய்ததாக போடப்பட்டுள்ள இந்த வழக்கில் ஜெயித்தால், ஆப்பிள் நிறுவனத்திற்கு 166 கோடி ரூபாய் கிடைக்கப்போவது நிச்சயம்.