நான் அவள் இல்லை புதுராகமும் பின்னணி பாடகி சுசித்ராவின் டூவிட்டர். அவர் பெயரிலான டுவிட்டர் பக்கங்களிலிருந்து, நடிகர் நடிகையின் அந்தரங்க படங்கள், வீடியோக்கள் வெளியாகி டுவீட்டர் உலகம் டுமீல் டுமீல் ரேஞ்சுக்கு போயிருக்கிறது…
வரப்போகும் தேதிகளில் என்றைக்கு யார்யாருடனான படுக்கையறை வீடியோ வெளியாகும் என முன்னறிவிப்பே செய்யும் அளவுக்கு மோசமான நிலைமை. அது ஒருபுறம் இருக்கட்டும்..
ஏன் இப்படியொரு நிலைமை உருவானது என்பதுதான் இங்கே ஆராயப்படவேண்டிய விஷயம்..
எம்ஜிஆர், சிவாஜி காலத்திலும் சரி, பழைய ரஜினி, கமல் காலத்திலும் சரி.. ஒரே ஸ்டுடியோவில் ஷூட்டிங் என்றாலும் வெவ்வேறு தளங்களில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் வேலை பார்ப்பார்கள்.. முடிந்ததும் நடிகருக்கு மனைவி, நடிகைக்கு அம்மா என துணையாக உடன் வருபவர்களுடன் வெளியே கிளம்பிவிடுவார்கள். மற்றவர்களை தேவையில்லாமல் சந்திப்பது மிகவும் அரிது.
பொதுநிகழ்ச்சி, சுபகாரியங்கள், துக்க நிகழ்ச்சிகள் போன்ற சந்தர்ப்பங்களில் மட்டுமே நடிகர், நடிகைகள் சந்தித்து பேச சந்தர்ப்பம் அமையும்.. மிக மிக நெருங்கிய நட்புவட்டாரத்தை தாண்டி எல்லோரிடமும் தினமும் நேரில் அரட்டை என்பது கிடையாது.
தனிப்பட்ட ரீதியில் சிலருக்கு தவறான தொடர்பு இருந்தாலும் அது வெளியே தெரியாத அளவுக்கு மிகமிக ரகசியமாகவே கட்டிக்காக்கப்படும்.. தகவல் தொடர்பு வசதிகள் இல்லாத காலகட்டம் அது என்பதால் விஷயம் பரவும் வாய்ப்பில்லாத அதிர்ஷ்டம் பெற்றவர்கள் அவர்கள்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே ‘யாருடனும் பகையில்லாத பெருந்தன்மையான நட்பு’ என்று பெயர் கொடுத்து நடிகர், நடிகைகள் நினைத்தால் சகட்டுமேனிக்கு ஏதோ ஒரு இடத்தில்கூடி அரட்டையடிப்பது சகஜமாகிவிட்டது. ஷூட்டிங் இருக்கிறதோ இல்லையோ, தினமும் நைட் பார்ட்டி கலாச்சாரம் கட்டாயமாகிவிட்டது. பாட்டு, நடனம், அரட்டை. கேலி என்று ஆரம்பித்து மதுவிருந்தை தாண்டி சர்வசாதாரணமாய் மாதுவிருந்துக்கும் போய்விடுகிறது..
போதையில் என்ன காரியம் செய்கிறோம் என்பதை உணராமலேயே வில்லங்க சம்பவங்களை செல்போனில் படமாகவும் வீடியோவாகவும் பதிவு செய்துகொள்கிறார்கள். இண்டர்நெட் கடலில் அந்தரங்கம் விழுந்து மிதந்தால் மூழ்கி மறையவே மறையாது என்பதை மறந்துவிடுகிறார்கள்.
இப்படி தறிகெட்டுபோய் இருப்பவர்கள் என்று யார் என மெல்லியதாய் அலசினால் பிரபலங்களின் வாரிசுகளாகவும் தாறுமாறான பணபலமிக்க குடும்ப பின்னணி கொண்டவர்களே பெரும்பான்மையாய் இருப்பார்கள்.
கொஞ்ச காலத்துக்கு முன்புதான், சேர்ந்த மாதிரி ஆங்காங்கே தலைதூக்கினார்கள் இந்த வாரிசுகள், இவர்கள் இப்படியொரு மேல்தட்டு அடையாளத்துடன் கைகோர்த்து உருவாக்கப்பட்ட ஆடம்பர நட்பு வட்டத்தில்தான், மேலும் பல வாய்ப்புகளை பெற்று பணத்தை குவிக்க நினைக்கும் நடிகைகள் வலியப்போய் விழுந்தார்கள் விழுகிறார்கள்.. சிலர் தெரியாமலும் போய் மாட்டிக்கொள்கிறார்கள்..
ஒருவரையொருவர் சந்தித்தால் காபி, டீ சாப்பிட்டுகொண்டு பேசிய நிலைமாறி, பரவச நிலைக்கு தயார்படுத்திக்கொண்டபடியேதான் பேச்சே ஓடும் என்கிறார்கள். கேட்டால், நாகரீக உலகில் இதெல்லாம் தவறில்லை என்பார்கள்.
வெளிநாட்டில் வெறும் ஆபாச படங்களில் மட்டுமே நடித்து புகழ்பெற்ற ஒருத்தியை கொண்டுவந்து பாடல்காட்சியில் ஆடவிட்டதோடு அல்லாமல் அவளுடன் நின்று குடும்பப்படம் கணக்கில் போட்டோ எடுத்துக்கொண்டார் ஒரு மிகப்பெரிய குடும்பத்து வாரிசு..
‘’நாங்கள் சம்பாதிக்கிறோம்..நாங்கள் அனுபவிக்கிறோம் உங்களுக்கு என்ன கேடு? என்று கேள்வியே பதிலாக வரும் என்பதால், தலையில் அடித்துக்கொண்டு கடப்பதை தவிர வேறுவழியில்லை.
இன்னொரு பக்கம் நடிகைகளில் ஒரு வகையறாக்களின் போக்கு மிகவும் அதிர்ச்சிகரமாகவே இருக்கும்..தங்களின் தனியறை அலங்கோல காட்சிகள் வெளிவந்தாலும் நடிகைகள் கவலைப்படுவதேயில்லை.. ‘நான் அவள் இல்லை’ என சிம்பிளாக சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள்..
இதிலும் அசாத்தியமான துணிச்சல் வகை ஒன்று உண்டு..
தனது நிர்வாணக்காட்சிகளை தானே வெளியிட்டுவிட்டு, பின்னர் யாரோ வெளியிட்டு பழிவாங்குவதாக அழுது ஆர்பாட்டம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய ஒரு நடிகை, அந்த வெளிச்சத்தில் கிடைத்த விளம்பரத்தில் டாப் ஸ்டாரின் படத்திற்கே வாய்ப்பை எட்டிப்பிடித்தார் என்ற திரைக்குப்பின்னால் வரலாறெல்லாம் இந்த அதிரடி ரகம்தான்..
கேவலமான நிலைமை ஏற்பட்டுள்ளதற்கு பல காரணங்கள் உண்டு.. அதில் மிகவும் முக்கியமானவை.. பெற்றோரின் பங்கு என்றால், கட்டுப்பாடற்ற பிள்ளை வளர்ப்பு, கண்காணிப்பே இல்லாத போக்கு.. வாரிசுகள் பங்கு என்றால் விரும்பியபடி வாழ ஆசைப்படும்போது, மானமாவது, சமூகமாவது என்ற, தன்னைப்பற்றி மட்டுமே நினைக்கும் திமிர்த்தனம்
இந்த களேபரத்தில் நடிகைகளை நினைக்கும்போது, ‘பூனையை விரட்டுவதைவிட கருவாட்டை பாதுகாப்பாக மூடிவைப்பதே சாலச்சிறந்தது’ என்றே சொல்லத்தோணுகிறது.. எதற்கும் தயார் என்பவர்களுக்கு உள்ள ஒரே எஸ்கேப் ஆயுதம்… நான் அவள் இல்லை
–
: ஏழுமலை வெங்கடேசன்