பிரிஸ்பேன்: நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், ஆஸ்திரேலியாவின் அபாயகரமான பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்தை 36 ரன்களில் காலி செய்தார் இந்திய பவுலர் வாஷிங்டன் சுந்தர்.

சிட்னி டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 131 ரன்கள் அடித்து மிரட்டிய ஸ்மித், இரண்டாவது இன்னிங்ஸிலும் 80 ரன்களுக்கு மேல் அடித்தார். இதனால், ஆஸ்திரேலியாவின் ஸ்கோர், முதன்முறையாக 300 ரன்களைக் கடந்தது.

இந்தமுறை ஸ்மித்தை அச்சுறுத்தக்கூடிய பெரிய பவுலர்கள் இந்திய அணியில் இல்லாத நிலையில், ஸ்மித் பிரித்து மேய்ந்து விடுவார் என்று அஞ்சப்பட்டது. ஆனால், கதை வேறாக போய்விட்டது.

மொத்தம் 77 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்து ஆடிவந்த ஸ்மித், சுந்தரின் பந்தில், ரோகித் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

தற்போது லபுஷேன் அரைசதத்தை நோக்கி நகர்கிறார். அவர் 45 ரன்களை எடுத்துள்ளார். மேத்யூ வேட் 6 ரன்களை அடித்துள்ளார். லபுஷேன் விக்கெட்டை இந்தியா விரைவாக வீழ்த்தும் பட்சத்தில், ஆஸ்திரேலியா பெரிய ஸ்கோர் எடுக்காமல் தடுக்கலாம்.