டில்லி:
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட்ட பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுமீது விசாரணை நடைபெற்று முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், வரும் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி பகுதியில் மீண்டும் பரபரப்பு நிலவி வருகிறது.
உயிர்க்கொல்லி நோய்களான சிறுநீரக கோளாறு, சுவாசக் கோளாறு, புற்றுநோய் உள்பட ஏராளமான நோய்களை உருவாக்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அந்த பகுதி மக்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்தது. போராட்டத்தின்போது வன்முறை வெடித்த நிலையில், காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிந்தனர். அதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்து மூடியது.
இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை சார்பில் தொடரப்பட்ட வழக்கில் பசுமை தீர்ப்பாயம், தனியாக விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்தி, சில நிபந்தனைகளுடன் ஆலையை திறக்க உத்தரவிட்டது. இதன் காரணமாக தூத்துக்குடி பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுமீதான விசாரணை கடந்த மாதம் நடைபெற்றபோது, தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி வழங்காதது ஏன் என கேள்வி எழுப்பி தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், உடனடியாக மின்சாரம் வழங்க உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது, ஆலை விதிகளை மீறியதாக அரசு குற்றம்சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு ஸ்டெர்லைட் வழக்கை விசாரிக்க அதிகாரம் உள்ளது எனவும் ஸ்டெர்லைட் தரப்பு வாதிட்டது.
ஆனால், ஸ்டெர்லைட் வாதத்தை எதிர்த்து தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், வைகோ போன்றோர் எதிர்வாதம் செய்துவந்தனர். இந்த வழக்கில் இறுதி விசாரணை யின்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜராகி வாதாடினார். ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் புகையால் பல நோய்கள் ஏற்படுவதாக வைகோ மீண்டும் குறிப்பிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. இதையடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இதற்கிடையில் தமிழக அரசு சார்பில் எழுத்துப்பூர்வ வாதங்களும் வைக்கப்பட்டன.
இந்த நிலையில் வரும் 18ந்தேதி (திங்கட்கிழமை) தீர்ப்பு வெளியாகும் என உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி பகுதியில் பரபரப்பு தொற்றி உள்ளது. ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். பல இடங்களில் சாலை தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.