சென்னை: ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமை யிலான ஒருநபர் ஆணையம், சுமார் மூணறை ஆண்டு கால விசாரணையைத் தொடர்ந்து இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயமடைந்தனர்.  இது தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம்  அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடத்தியது. இறுதியாக முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்திய நாதன், கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. விஜயகுமார், முன்னாள் டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆகியோரி டமும் விசாரணை நடத்தப்பட்டது. மொத்தம்  1426 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு 1048 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதியப்பட்டது. 36 கட்டங்களாக நடைபெற்ற விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், விசாரணை ஆணைய அறிக்கையை ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் வழங்கினார்.