தூத்துக்குடி:

தூத்துக்குடி மக்களை தொட்டால் நடப்பதே வேறு என்றும், ஸ்டெர்லைட் இனிமேல் தூத்துக்குடியில் நடத்த முடியாது என்றும் தூத்துக்கு எம்.பி. சசிகலா புஷ்பா சசிகலா ஆவேசமாக பேசினார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி அப்பாவி பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 11 பேர் கொல்லப்பட்டனர். காவல்துறையின் இந்த கொலை வெறித் தாக்குதலுக்கு  சசிகலா புஷ்பா எம்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சசிகலா புஷ்பா,  ஸ்டெர்லைட் ஆலையை ஏன் மூட முடியவில்லை. லஞ்சம் வாங்கி விட்டீர்களா? என்று கேள்வி எழுப்பினார். ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் போலீஸூம் மாவட்ட நிர்வாகமும் லஞசம் வாங்கிவிட்டதா என்றார்.

பெண்கள் உட்பட  12 பேரை கொன்று போட்டுள்ளனர். 12 பேரை கொல்ல தைரியம் எப்படி வந்தது? 12 பேரை கொல்ல யார் அனுமதித்தது. ஸ்டெர்லைட் இனிமேல் தூத்துக்குடியில் நடத்த முடியாது.

ஆலைக்கு எதிராக போராடிய மக்களை  கொலை செய்ய யார் அதிகாரம் கொடுத்தது? தூத்துக்குடி தென் மாவட்டம் என நினைக்க வேண்டாம். 100 நாள் போராட்டத்தை தாண்டியும் மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது.   மக்களை கட்டுப்படுத்த முடியாது.  தூத்துக்குடியை தொட்டா மக்களை கட்டுப்படுத்த முடியாது. ஆலையை மூடும் வரை சட்டப் போராட்டம் நடத்துவோம்.

தான் மேயராக இருந்த போது 2013ல் ஸ்டெர்லைட் ஆலையை மூடினேன். அதன்பிறகு ஆட்சியாளர்கள் ஆலையை திறக்க அனுமதி கொடுத்துள்ளனர் என்று கூறினார்.

மேலும், மக்கள் மீது, துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதி கொடுத்த கலெக்டர், எஸ்பி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ்- ஈபிஎஸ் உத்தரவு கொடுத்தார்களா? கொன்றுவிட்டு பணம் கொடுத்தால் சரியாகிவிடுமா? தூத்துக்குடி மக்களை தொட்டால் நடப்பதே வேறு என்று சசிகலா புஷ்பா மிரட்டல் விடுத்துள்ளார்.

இவ்வாறு சசிகலா புஷ்பா ஆவேசமாக பேசினார்.