சென்னை:

ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு மேலும் இடம் ஒதுக்கியது எப்படி என தூத்துக்குடி சிப்காட் நிர்வாகத்துக்கு தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் திடீர் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தூத்துக்குடியில் உள்ள  சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு வாயுவினால், குமரெட்டியாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் மூச்சுத்திணறல், தொண்டை வலி, தோல் நோய், கண் பார்வை, கேன்சர் உள்பட பலவித நோய்களின் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதுகுறித்து பல்வேறு புகார் மற்றும் வழக்குகள் தொடுத்தும் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில், மக்கள் வெகுண்டெழுந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுமார் 50 நாட்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகம் மட்டுமின்றி உலக தமிழர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.

போராட்டம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து, 15 நாட்கள் பராமரிப்பு பணிக்காக ஆலை மூடப்படுவதாக ஆலை நிர்வாகம் அறிவித்து உள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள்,  ஸ்டெர்லைட் ஆலை மூடும் வரையில் போராட்டம் தொடரும் என்று அறிவித்து இன்று 51வது நாளாக இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தூத்துக்குடி சிப்காட் நிறுவனத்திற்கு திடீரென நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை  2வது யூனிட்டை சிப்காட்-2 வது வளாகத்தில் தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சிப்காட் 2வது வளாகத்தில், ஸ்டெர்லைட் ஆலைக்காக 324 ஏக்கர் நிலத்தை சிப்காட் நிறுவனம் ஒதுக்கியுள்ளது.

இதற்கான  இடம் கையகப்படுத்தும்  பணிகள் இன்னும்  தொடங்கப்படாத நிலையில், எதன் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு 324 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது என்பதை விளக்குமாறு சிப்காட் நிறுவன திட்ட இயக்குநருக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.