சென்னை: 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முயற்சி எடுக்காத மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள், மருந்துகடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கோயம்பேடு வணிக வளாகம் இன்று மூடப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டால் சென்னையில் பெரும்பாலான பகுதியில் கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் அடைக்கப்படடுள்ளன.

உச்சநீதிமன்ற இறுதித்தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று முழு அடைப்பு நடத்துவதென தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்திருந்தது.

அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கடைகள் திறக்கப்படவில்லை. சென்னை கோயம்பேடு சந்தைக்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டதால், வழக்கமாக காய்கறி கொண்டு வரும் லாரிகள் இன்று வரவில்லை. கடைகளும் திறக்கப்படாததால், கோயம்பேடு பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும், இந்த கடை அடைப்பில்  தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம், தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கமும் பங்கேற்றுள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடியே காணப்பட்டது.

வெள்ளையன் தலைமையிலான தமிழ்நாடு வணிகர்சங்க பேரவை வரும் 11ந்தேதி முழு அடைப்பு நடைபெறும் என்று அறிவித்துள்ள நிலையில், இன்றைய போராட்டத்திலும் விருப்பமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம் என்று கூறியிருந்த நிலையில், தென் மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு வணிகர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

இன்று தமிழகம் முழுவதும் 21 லட்சம் வணிகர்கள் தங்களது கடையை அடைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருவதாக வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.