ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளின் அதிகாரத்தை பறிக்கும் மத்திய அரசு! மேற்குவங்கம் உள்பட 6 மாநிலங்கள் கடும் எதிர்ப்பு!

Must read

டெல்லி:  ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளின் அதிகாரத்தை பறிக்கும் மத்திய அரசின் செயலுக்கு, மேற்குவங்கம் உள்பட 6 மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

மாநில அரசுகளில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதி இல்லாமலேயே மத்திய அரசுப் பணிக்கு அயல்பணி முறையில் அழைத்துக் கொள்ளும் அதிகாரத்தை தனக்குத்தானே வழங்கிக்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இதற்காக இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் விதிகளின் 6-வது விதியை திருத்துவது தொடர்பாக மாநில அரசுகளிடம் மத்திய அரசு கருத்துக்கேட்டுள்ளது. மாநில அரசுகளின் அந்த அதிகாரத்தை பறிக்கும் வகையில் மத்திய அரசு சட்ட திருத்த மசோதா கொண்டு வர உள்ளது. இந்த சட்ட திருத்தத்துக்கு மாநில அரசுகள் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் மத்திய அரசு இந்தத் திருத்தத்தை செய்யப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மாநில அரசுகளுக்கு ஒதுக்கப்படும் குடிமைப்பணி அதிகாரிகளை மத்திய அரசு தன்னிச்சையாக அழைத்துக் கொள்வதென்பது மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் செயலாகும். அதுமட்டுமின்றி, மத்திய அரசுக்கு அஞ்சி பணியாற்றும் நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்படுவர். இது நல்ல நிர்வாகத்தை வழங்காது என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான மாநில உரிமையை பறிக்கும் இந்தத் திட்டத்தை கேரள, மேற்குவங்கம், மகாராஷ்டிரா உள்பட 6 மாநில அரசுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துஉள்ளது.

அதே வேளையில்,  ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு மாற்றும் விவகாரங்களில் மாநில அரசுகளின் ஒப்புதல் பெற வேண்டும். அதாவது இந்த விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு வீட்டோ எனப்படும் முடிவெடுக்கும் அதிகாரம் உண்டு. இந்த நிலைமையை மாற்றும் வகையில். வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதன் மூலம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளை மாநில அரசு ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு பணிக்கு எடுத்துக் கொள்ள முடியும் என்கிற நிலைமை உருவாகும்.

இது குறித்து மாநில அரசுகளுக்கு கடந்த டிசம்பர் மாதம் 2 முறை மத்திய அரசு கடிதங்களை அனுப்பியது. மீண்டும் மத்திய அரசு ஜனவரி 12-ந் தேதி ஒரு கடிதம் அனுப்பி வைத்தது. வரும் 25-ந் தேதிக்குள் மாநிலங்கள் கருத்து தெரிவிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசுப் பணிக்கு செல்ல விரும்பும் அதிகாரிகளின் பட்டியலையும் மத்திய அரசு கேட்டிருக்கிறது.

மத்தியஅரசின் இந்த நடவடிக்கையை மேற்கு வங்க முதல்வர் கடுமையாக எதிர்த்து கடிதம் எழுதி உள்ளார். அதில், மத்தியஅரசின் இந்த நடவடிக்கை  கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்று சாடியுள்ளார்.

மத்தியஅரசின் இந்த அறிவிப்புக்கு   கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்கள் மத்திய அரசின் முயற்சிக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. குறிப்பாக பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் ஒருங்கிணைந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

More articles

Latest article